பொங்கலுார்:திருப்பூர் மாவட்டத்தில் கொப்பரை உலர் களங்கள் அதிக அளவில் உள்ளது. இத்தொழிலுக்கு உள்ளூரில் ஆட்கள் கிடைப்பதில்லை.
உலர் களங்களில் பெரும்பாலும் சேலம், திருச்சி, மணப்பாறை, ஊட்டி உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே பணிபுரிகின்றனர்.
தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். இதனால் கொப்பரை உலர் களங்கள் வெறிச்சோடி கிடக்கிறது. கொப்பரை உற்பத்தி முடங்கியுள்ளது.
ஒவ்வொரு உலர் கள உரிமையாளரும் பத்தாயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை அட்வான்ஸ் தொகை கொடுத்து வேலைக்கு அமர்த்தியுள்ளனர். ஊருக்குச் சென்றவர்களில் சிலர் தங்கள் சொந்த ஊரிலேயே வேறு வேலையை தேடிக்கொள்வதும் உண்டு.
சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பாவிட்டால் உலர் கள உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். தற்போது தேங்காய் சீசன் முடியும் காலம் ஆகும்.
கொப்பரை கிலோ, 80 முதல் 85 வரை ஊசலாட்டத்தில் உள்ளது. தொழிலாளர்கள் முழுமையாக பணிக்கு திரும்ப தை இறுதி ஆகிவிடும்.
மாசி, பங்குனி மாதங்களில் தேங்காய் சீசன் மீண்டும் துவங்கஉள்ளது. எனவே, விலை சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்குள் தங்கள் கையிருப்பை குறைக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Advertisement