திருப்பூர்:திருப்பூரில், கோவிலில் இருமுடி பைகள் எரித்து, உண்டியல் பணத்தை திருடிய வழக்கில் வாலிபரை கைது செய்தனர். இவருக்கு கடந்த மாதம் பூசாரியை எரித்து கொன்ற வழக்கில் தொடர்பு இருப்பது தெரிந்தது.
திருப்பூர் - காங்கயம் ரோடு, காட்டுப்பாளையம், அங்காளம்மன் நகர், அமராவதிபாளையம் ரோட்டில் புத்துகண் ஸ்ரீ நாகாத்தம்மன் கோவில் உள்ளது.
கடந்த 12ம் தேதி நள்ளிரவில் கோவிலுக்குள் நுழைந்த நபர், பக்தர்களின் இருமுடி பைகளைதீயிட்டு எரித்து, உண்டியல் உடைக்கப்பட்டு பணம், அம்மன் அலங்காரத்தை கலைத்து, 2 சவரன் நகையை திருடி சென்றார்.
இதுதொடர்பாக நல்லுார் போலீசார் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர்.
கிரேன் ஆபரேட்டர் கைது
அதில், கிடைத்த தகவலின் பேரில் வழக்கில் சந்தேகப்படும் நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் திண்டுக்கல்லை சேர்ந்த சதீஷ்குமார், 30 என்பதும், அமராவதிபாளையத்தில் தங்கி கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. புத்துக்கண் கோவிலுக்குள் நுழைந்து இருமுடி பைகளை எரித்து, உண்டியல் பணத்தை திருடியது தெரிந்தது.
போலீசார் கூறியதாவது:
கோவில் திருட்டில் தொடர்புடைய சதீஷ்குமார் கடந்த டிச., 16ம் தேதி நண்பரை அவிநாசியில் பஸ் ஏற்றி விட்டு, நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். 17ம் தேதி அதிகாலையில், வெங்கமேடு, ஆத்துப்பாளையம் ரோட்டில், கருப்பராயன் கோவிலில் உண்டியலை தேடினார். ஆனால், கிடைக்க வில்லை. இதைப்பார்த்து பூசாரி சுப்ரமணி, 72 சத்தம் போட்டார். இதனால், அவரில் தலையில் கல்லைபோட்டு கொன்று, அங்கிருந்து துணிகளை மேலே போட்டு, எண்ணெய் ஊற்றி எரித்து சென்றது தெரிந்தது. இரு வழக்கிலும் அவரை கைது செய்தோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.