பல்லடம்:அரசுப் பள்ளிகளில் 'அடல் டிங்கர்' ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும் என, கடந்த ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு, பல்லடம் அடுத்த, பூமலுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தின் மூலம்,
மாணவ, மாணவியர் ஆராய்ச்சி குறித்த கற்றல் எளிதாகி வருகிறது.
பள்ளித் தலைமை ஆசிரியர் ரமேஷ் கூறியதாவது: பல்லடம் வட்டாரத்தில், பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அடுத்ததாக எங்கள் பள்ளியில்தான் 'அடல் டிங்கர்' ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்களின் ஆராய்ச்சிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் உள்ளன. முப்பரிமாண பிரின்டர், தொலைநோக்கு கருவி, ரோபோ, சென்சார் என, எண்ணற்ற ஆராய்ச்சி முறைகளால் மாணவர்களின் கற்கும் திறன் மேம்படுகிறது.
உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு, இந்த அறிவியல் ஆய்வகம் நல்ல பயன் அளிக்கும். புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கவும் வாய்ப்பாக இது அமையும்.