காங்., - எம்.பி., ராகுல்: நீங்கள் தற்போது பார்ப்பது ராகுல் அல்ல; நீங்கள் அப்படி பார்க்கலாம்; ராகுல் உங்களுடைய நினைப்பில் இருக்கிறார்; என்னுடைய நினைப்பில் இல்லை. அவர், பா.ஜ.,வின் நினைவில் இருக்கிறார்; என்னுடைய நினைவில் அல்ல. என்ன குழப்பமாக இருக்கிறதா? நான் என்னுடைய பிம்பம் குறித்து கவலைப்படவில்லை. எனக்கென எந்த பிம்பமும் இல்லை. நீங்கள் எப்படி வேண்டுமானாலும், என்னை உருவகப்படுத்தி கொள்ளலாம். அது, நல்லதாக இருக்கலாம் அல்லது கெட்டதாக இருக்கலாம்.
டவுட் தனபாலு: எங்க ஊர் கமல்ஹாசனை, டில்லியில ஒரு மணி நேரம் சந்திச்சு பேசியதுக்கே, ராகுல் இப்படி பேச ஆரம்பிச்சிட்டாரே... இன்னும், அவரை கூட்டணியில சேர்த்துக்கிட்டா என்ன கதிக்கு ஆளாவார்னு, 'டவுட்' வருதே!
முதல்வர் ஸ்டாலின்: அ.தி.மு.க., ஆட்சியின் கடைசி ஆண்டான, 2020 - 21ம் ஆண்டில், 83 ஆயிரத்து 275 கோடி ரூபாய் நிகரக் கடனாக பெறப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின், கடும் நிதி நெருக்கடியில், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்திய போதிலும், திறமையான நிர்வாகத்தால், 2021 - 22ம் ஆண்டில் பெறப்பட்ட நிகரக் கடனை, 79 ஆயிரத்து 303 கோடி ரூபாயாக குறைத்துள்ளோம். இது, முந்தைய ஆண்டை விட, 4,000 கோடி ரூபாய் குறைவு.
டவுட் தனபாலு: 2020ல், கொரோனா கோரதாண்டவம் ஆடி, ஊரடங்கால ஊரே முடங்கி, வரி வருமானம் இல்லாம, அ.தி.மு.க., ஆட்சியில நிறைய கடன் வாங்கினாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை... நீங்க வந்ததும், கொரோனா படிப்படியா குறைஞ்சு, வரி வருவாய் கொட்ட துவங்கியதால, கடன் அளவு கம்மியானதே தவிர, திறமையான நிர்வாகத்துல இல்லை!
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்: இந்த திருவிழா காலத்தில், கிளாசிக் உருவமாக தோன்றியுள்ள, துணிவு திரைப்படத்தை கண்டு களியுங்கள். துணிவு திரைப்படக் குழுவுக்கு வாழ்த்துக்கள்; துணிவே துணை.
டவுட் தனபாலு: துணிவுக்கு போட்டியா வந்த வாரிசு படத்துல நடிச்சவர், எதிரணி படத்துக்கு இலவச விளம்பரம் தர்றாரே... தயாரிப்பாளர் தரப்பு, 'பேமென்ட்' பாக்கி வச்சுடுச்சோ என்ற, 'டவுட்' எழுதே!
பிரதமர் நரேந்திர மோடி:
பிரதமர் நரேந்திர மோடி: போர்,
மோதல்கள், பயங்கரவாதம், அரசியல் குழப்பங்கள், உணவுப் பொருள், உரம்,
பெட்ரோலியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்வு, கொரோனாவால் ஏற்பட்ட பெரும்
பொருளாதார பாதிப்பு, பருவநிலை மாறுபாடு பிரச்னைகள் என, 2022ல் பல பெரும்
சவால்களை சந்தித்தோம். தற்போது, புதிய ஆண்டு பிறந்துள்ள நிலையில், உலக
நாடுகள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளன; அதே நேரத்தில், இவை பெரும்
சிக்கலில் உள்ளன. இந்நிலை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதை நாம்
உறுதியாக கணிக்க முடியாது.
டவுட் தனபாலு: விலைவாசி உயர்வை தவிர,
மேற்கண்ட எந்த பிரச்னைகளும் நல்ல வேளையா நம்ம நாட்டில் இல்லை... 140
கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நம்ம நாட்டை மற்ற நாடுகளும், 'பாலோ'
செய்தால், எந்த சிக்கலில் இருந்தும், 'ஈசி'யா விடுபடலாம் என்பதில்,
'டவுட்'டே இல்லை!
முன்னாள் முதல்வர் பன்னீர்
செல்வம்: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, ஏழை மக்களுக்கான அம்மா உணவகங்கள்
திட்டத்தை நீர்த்து போகச் செய்யும் நடவடிக்கைகளை, தி.மு.க., அரசு எடுத்து
வருகிறது. ஜெயலலிதாவால் படிப்படியாக விரிவாக்கப்பட்ட அம்மா உணவகம்
திட்டத்தை, படிப்படியாக குறைத்து, அங்கு பணிபுரியும் ஊழியர்களை வீட்டுக்கு
அனுப்பும் நடவடிக்கையையும், தி.மு.க., அரசு எடுத்து வருகிறது.
டவுட்
தனபாலு: தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதலே, இதை செய்கிறது என்றால்,
எதிர்க்கட்சியான நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க... அ.தி.மு.க.,
யாருக்கு என்று உங்களுக்குள்ள அடிச்சுக்கவே நேரத்தை செலவிட்டதுல, அம்மா
உணவகம் எக்கேடு கெட்டா என்னன்னு இருந்துட்டீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை
செய்தி: 'சுய விளம்பரத்துக்காக, அரசு பணத்தை செலவிட்ட விவகாரத்தில், 163
கோடி ரூபாயை, 10 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்; இல்லையெனில், டில்லியில்
உள்ள, ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு, 'சீல்' வைக்கப்படும்' என,
அக்கட்சிக்கு டில்லி மாநில அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை,
'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
டவுட் தனபாலு: 'ஊரான் விட்டு நெய்யே...
என் பொண்டாட்டி கையே' என்பது போல, மக்களின் வரிப்பணத்தை எடுத்து,
தங்களுக்கு சுய விளம்பரம் பண்ணிக்கிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு, இது
பெரிய சம்மட்டி அடி என்பதில், 'டவுட்'டே இல்லை!