திருப்பூர்;திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் சார்பில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான, ஒன்பதாம் ஆண்டு டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி முருகம்பாளையத்தில் உள்ள ஒயர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று துவங்கி வரும், 21 ம் தேதி வரை நடக்கிறது.
இத்தொடரில், திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அகாடமி, மைசூர் சி.ஜி., ஹப் ஆப் கிரிக்கெட், சென்னை எலைட் கிரிக்கெட் அகாடமி, கேரளா திருப்பனித்துரா கிரிக்கெட் கிளப், ஆந்திரா கோச்சிங் பியோண்ட், ஆந்திரா அனந்தப்பூர் ஸ்போர்ட்ஸ் அகாடமி, புனே கிரிக்கெட் நெக்ஸ்ட் அகாடமி மற்றும் கேரளா ஆர்.எஸ்.சி., - எஸ்.ஜி., கிரிக்கெட் ஸ்கூல் அணி என, எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று முதல் நாள் போட்டியை, திருப்பூர் போலீஸ் எஸ்.பி., ெசஷாங் சாய் துவக்கி வைத்தார். சக்தி கல்வி குழுமத்தின் துணை தலைவர் தீபன், டாப் லைட் குழும நிர்வாக இயக்குனர் வேலுசாமி மற்றும் திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருப்பூர் அணி அசத்தல்
காலையில் நடந்த முதல் போட்டியில் திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணியும், மைசூர் சி.ஜி., ஹப் ஆப் கிரிக்கெட் அணியும் மோதியது. முதலில் களமிறங்கிய திருப்பூர் அணி, 30 ஓவரில், 2 விக்கெட் இழந்து, 252 ரன் எடுத்தது. அபாரமாக விளையாடிய ஜெய்சிம்ஹா, 130 ரன், அமித், 71 ரன் எடுத்து ஆட்டமிழக்கவில்லை.
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய மைசூர் அணி, 26.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 90 ரன் மட்டுமே எடுத்தது. திருப்பூர் அணி, 162 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. 130 ரன் எடுத்த ஜெய்சிம்ஹா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை அணி வெற்றி
மற்றொரு போட்டியில், சென்னை எலைட் கிரிக்கெட் அகாடமியும், கேரளா திருப்பனித்துரா கிரிக்கெட் கிளப்பும் மோதியது.
முதலில் களமிறங்கிய சென்னை அணி, 30 ஓவரில், 7 விக்கெட் இழந்து, 211 ரன் எடுத்தது. மோகன் பிரசாத், 104 ரன், சித்தார்த், 30 ரன் எடுத்தனர். இழக்கை நோக்கி களமிறங்கிய கேரளா அணி, 30 ஓவரில், 2 விக்கெட் இழந்து, 211 ரன் எடுத்து போட்டி 'டிரா' ஆனது.
போட்டி 'டிரா' ஆனதால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் கேரளா அணி, ஒரு ஓவரில், 1 விக்கெட் இழந்து, 14 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சென்னை அணி, ஒரு ஓவரில், 1 விக்கெட் இழந்து, 15 ரன் எடுத்து வென்றது. 104 ரன் எடுத்த மோகன் பிரசாத் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.