மேட்டுப்பாளையம்:அரசால் தடை செய்த, குட்கா போதைப்பொருட்களை, காரமடையில் மறைத்து வைத்து, விற்பனை செய்து வந்தவர் கைது செய்யப்பட்டார்.
மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாலாஜி தலைமையில், போலீசார் மேட்டுப்பாளையம் ரோட்டில் குட்டையூர் அருகே வந்த, மாருதி ஆல்டோ காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், 135 கிலோ ஹான்ஸ், விமல் கூல்லிப் சோகத் ஆகிய குட்கா போதைப்பொருட்கள் இருந்தன. காரை ஓட்டி வந்த மேட்டுப்பாளையம் கரட்டுமேட்டை சேர்ந்த காஜா மைதீனிடம், 49; விசாரணை செய்த போது, அவர் கர்நாடக மாநிலம், மைசூரில் குட்கா போதை பொருட்களை மொத்தமாக வாங்கி, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு வரும் லாரிகளில், ஏற்றி வந்துள்ளது தெரியவந்தது.
காரமடை பாலாஜி நகரில் உள்ள, எம்.ஆர்.பி., நகரில் ஆனந்த் என்பவரின் வீட்டில், குட்கா பொருட்களை இருப்பு வைத்துள்ளார். இங்கிருந்து கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில், கடைகளுக்கு சில்லறை விற்பனை செய்து வந்துள்ளார்.
குடோனில் இருந்து, 1,100 கிலோ எடை குட்கா போதை பொருட்கள் அடங்கிய மூட்டைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து, காஜாமைதீனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
குட்கா போதை பொருள் விற்பனை செய்ய பயன்படுத்தி வந்த, மாருதி ஆல்டோ கார், இரண்டு இருசக்கர வாகனங்கள், 1100 கிலோ குட்கா போதைப் பொருள் மூட்டைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.