கோவை:ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பாரதிய வித்யா பவனில் 26வது பொங்கல் இசை விழா நடைபெற்று வருகிறது.
ஐந்து நாட்கள் நடைபெறும் இசை விழாவில்,வரும், 17ம் தேதி வரை பல்வேறு கலைஞர்களின் இசை கச்சேரிநடக்கவுள்ளது.
முதல் நாளன்று, பாரதிய வித்யா பவன் பள்ளி மாணவர்களின் பஜனையுடன் நிகழ்ச்சி துவங்கியது. இசைத்துறையில் பல சாதனைகள் புரிந்த இசை கலைஞர்களுக்கு, பாரதிய வித்யா பவன் சார்பில் ஆண்டு தோறும் 'சங்கீதசாம்ராட்' விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, சங்கீதசாம்ராட்விருது, கர்நாடக இசை கலைஞர் ராஜ்குமார் பாரதிக்கு வழங்கப்பட்டது. கோவை 'சுப்ரி முருக கான விருது' திருப்புகழ் வித்வான் வைத்தியநாதனுக்கு வழங்கப்பட்டது. விருதை, பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், இசைக்கலைஞர் ராஜ்குமார் பாரதி பேசுகையில், ''புத்தகங்களை மட்டும் படிப்பது கல்வி அல்ல. பண்பாடு மற்றும் பாரம்பரியத்தையும் கற்றுத்தருவதே கல்வி. அவ்வகையில், பாரதிய வித்யா பவன் கல்வியோடு கலாசாரத்தையும் மாணவர்களுக்கு கற்றுத்தந்து, சமுதாயத்துக்கு பெரும் தொண்டு ஆற்றி வருகிறது,'' என்றார்.
தொடர்ந்து, 'மல்லாடி பிரதர்ஸ்' குழுவினரின் இசை கச்சேரி நடந்தது. பாரதிய வித்யா பவன் பதிவாளர் பிரபாகர் ராவ், பொருளாளர் அழகிரிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், பெற்றோர், மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.