பெ.நா.பாளையம்:துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் பிரிவில் மரக்கிளையை வெட்டியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க கோரி, அதே மரத்திடம் கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினர் பூஜை செய்து வேண்டிக் கொண்டனர்.
மேட்டுப்பாளையம் ரோடு, சுப்பிரமணியம் பாளையம் பிரிவு அருகே பழமையான எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பின்புறம், 50 ஆண்டுகளுக்கு மேலான புளிய மரத்துடன் இணைந்து ஆலமரமும் வளர்ந்து உள்ளது.
சமீபத்தில் இந்த மரத்துக்கு அருகே உள்ள, தனியாருக்கு சொந்தமான கடைகளில் விளம்பர பலகைகள் வைப்பதற்காக, மரத்தின் பெரிய கிளைகளை வெட்டியுள்ளனர்.
இதை அறிந்த, கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, மரம் வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவை வடக்கு கோட்டாட்சியர், தாசில்தார், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பினர்.
முன்னதாக வெட்டப்பட்ட மரத்துக்கு சிகப்பு துணி கட்டி, மஞ்சள், குங்குமம் பூசி, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் உள்ளிட்டவை வைத்து கற்பூரம் காட்டி, சிறப்பு பூஜைகளை செய்து மரத்தை சுற்றி வந்தனர்.
பின்னர், புகார் மனுவை, அதில் வைத்து, மரக்கிளைகளை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டிக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன், பொருளாளர் ராஜேந்திரன், துணைச் செயலாளர் பன்னீர்செல்வம், நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.