விருதுநகர்,--விருதுநகர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் நாய்த்தொல்லைக்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் ஓர் கடிவாளமிடாமல் வேடிக்கை பார்ப்பதால் வாகன ஓட்டிகள், குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.
மாவட்டத்தில் இன்று வரை நாய் தொல்லை கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக உள்ளது. மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் கூட நாய் தொல்லை கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட நகராட்சி பகுதிகளில் நாய் தொல்லையை கட்டுப்படுத்துவது குதிரை கொம்பாக உள்ளது.
இதற்கு நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது தான் உண்மை. சிவகாசி மாநகராட்சியிலும் நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவில் பெருகி விட்டது.
விருதுநகர் நகராட்சியிலும் இன்று வரை குடிநீர், பஸ் போக்குவரத்து பிரச்னைக்கு சமமாக வெறி நாய்க்கடி பிரச்னையும் அதிகளவில் உள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாததால் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர் வாகன ஓட்டிகள்.
குடியிருப்புகளுக்கு வெளியே சுற்றி திரியும் நாய்களால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெளியில் நடமாட, விளையாட விட அச்சப்படுகின்றனர்.
ஆகவே நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அதிகரித்து வரும் நாய் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பர். மாவட்டநிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.