சிவகாசி,- -வெம்பக்கோட்டை ஒன்றியம் கே.மடத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மதிய உணவிற்காக 500 மீட்டர் துாரம் அலைவதால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் கே.மடத்துபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 364 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் 150 மாணவர்கள் அரசு மூலம் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு சாப்பிடுகின்றனர்.
5 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பாட்டில் இருந்த பழைய பள்ளி கட்டடம் அருகிலேயே மாணவர்களுக்காக சமையல் கூடம் கட்டப்பட்டு, மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் கூடுதல் மாணவர் சேர்க்கையால் இப்ப பள்ளிக்கு என புதிய கட்டடம், பழைய கட்டடத்திலிருந்து 250 மீட்டர் தொலைவில் கட்டப்பட்டது.
தற்போது மாணவர்கள் அங்கு தான் படிக்கின்றனர். ஆனால் சமையல் கூடம் பழைய பள்ளி வளாகத்திலேயே இயங்குகிறது. இதனால் மதிய உணவிற்காக இப்பள்ளி மாணவர்கள் சாப்பிடுவதற்காக 500 மீட்டர் துாரம் அலைய வேண்டியுள்ளது.
மதிய உணவு இடைவேளை 30 நிமிடம் மட்டுமே உள்ளதால் மாணவர்கள் சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர். இவர்களுக்கு நடந்து சென்று வருவதற்கே நேரம் சரியாகி விடுகின்றது. எனவே மாணவர்களின் நலன் கருதி புதிய பள்ளி வளாகத்திலேயே சமையல் கூடம் கட்டி செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பெற்றோர் விரும்புகின்றனர்.