காரியாபட்டி, --ரோடு போடப்பட்ட சில மாதங்களிலே தார் பெயர்ந்ததால் வாகனங்கள் தட்டித் தடுமாறி செல்ல வேண்டியிருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
காரியாபட்டியிலிருந்து கள்ளிக்குடி 17 கி.மீ., தூரம் உள்ளது. விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், குற்றாலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல இந்த வழித்தடத்தை அதிக அளவிலான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் படு மோசமாக இருந்த ரோட்டை சில மாதங்களுக்கு முன் சீரமைத்தனர். சீரமைக்கப்பட்ட சில நாட்களிலே சென்னம்பட்டி, குராயூர் அருகே தார் பெயர்ந்து பள்ளங்களாக உள்ளன. இதனை சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் தட்டுத் தடுமாறி செல்ல வேண்டி இருக்கிறது. இரவு நேரங்களில் பள்ளங்கள் தெரியாததால் வேகமாக வரும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து பழுதடைகின்றன. டூவீலரில் வருபவர்கள் நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படுகிறது.
பகல் நேரத்தில் பள்ளத்தை விலகிச் செல்ல நேரிடும் போது, எதிரே வரும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கண்டும் காணாமல் இருப்பதால் பெரிய விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.