ஸ்ரீவில்லிபுத்தூர்--தைப்பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு சதுரகிரியில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தைப்பொங்கலை முன்னிட்டு ஜன. 14 முதல்17 வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதில் நேற்றும், இன்றும் தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், ஜன.16, ஜன. 17 தேதிகளில் சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், தற்போது அதிகாலையில் கொட்டும் குளிர் பனியின் தாக்கம் தாங்க முடியாத அளவிற்கு உள்ளதால் மூணாறு, கொடைக்கானல், மேகமலை போன்ற மலை பகுதி சுற்றுலாத் தலங்களுக்கு குழந்தைகளுடன் செல்வதற்கு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
அதே நேரம் மதுரை, திருப்பரங்குன்றம், ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, பழனி போன்ற ஆன்மிக நகரங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், சதுரகிரியில் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்களை சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதிப்பது வழக்கம். மற்ற நாட்களில் அனுமதிப்பது கிடையாது.
தை அமாவாசையை முன்னிட்டு ஜன. 19 முதல் 21 வரை பக்தர்கள் அனுமதிக்கப்படலாம். தற்போது தொலைதூர நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ள மக்கள், ஜன. 16 , 17 தேதிகளில் சதுரகிரியில் சுவாமி தரிசனம் செய்ய விரும்புகின்றனர்.
தற்போது மழைக்கான அறிகுறியே இல்லாத நிலையில் வனத்துறையும், அறநிலையத்துறையும் இணைந்து பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.