கமுதி,-கமுதி அருகே கருங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பருவமழை பொய்த்ததால் சோளம் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.
பேரையூர், கருங்குளம், மருதங்கநல்லூர், பாக்குவெட்டி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கம்பு, சோளம் சிறுதானிய பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இவற்றிற்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானதால் கடந்த சில ஆண்டுகளாக சோளம் சாகுபடியில் அதிக மகசூல் கிடைத்தது.
இதனால் நெல் விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தை சோளம் ஈடுகட்டியது. இந்த ஆண்டு பருவ மழை பொய்த்துள்ளதால் கண்மாய், ஊரணிகளில் தண்ணீர் இன்றி வறண்டு போனது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சோளம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் குறைவான மகசூல் கிடைத்துள்ளது. கிராமங்களில் உலர் களம் வசதி இல்லாததால் வேறு வழியின்றி முதுகுளத்தூர்-கமுதி ரோட்டில் ஆபத்தை உணராமல் சாலையில் சோளத்தை உலர வைத்து தரம்பிரிக்கின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது.
விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு சிறுதானியம் விவசாயத்தில் மகசூல் குறைந்துள்ளதால் செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை. எனவே வரும் காலங்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை தேக்கி வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் உலர்களம் அமைக்க வேண்டும், என்றனர்.