சென்னை:பண்டிகைகள் பல கொண்டாடினாலும், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் கொண்டாட்டமான, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு என்றும் தனி மவுசு உண்டு. கடந்த மூன்று ஆண்டுகளாக, கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றால் களையிழந்த பொங்கல் பண்டிகை, இந்தாண்டு விழாக்கோலம் பூண்டது. இதையடுத்து, கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளில் காய்கறி விற்பனை அதிகரித்து காணப்பட்டது. கடற்கரை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் தை மாதம் 1ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதை போகி பண்டிகையுடன் நேற்று மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதற்கு ஏற்ப, மக்கள் வீடுகளை சுத்தம் செய்து, நேற்று அதிகாலை முதல் தேவையற்ற பொருட்களை தீயிட்டு கொளுத்தி, மேளம் அடித்து போகியை கொண்டாடினர்.
இதன் எதிரொலி, புகை மூட்டத்தால், சென்னை மாநகர் பனி சூழ்ந்தது போன்று காட்சியளித்தது.
களைகட்டிய சந்தை
இன்று தை பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கோயம்பேடு சந்தை வளாகத்தில் பொங்கல் சிறப்புச் சந்தை அமைக்கப்பட்டிருந்தது.
இதில், 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு, 300 ரூபாய்க்கும், 10 செடிகள் கொண்ட மஞ்சள் கொத்து, 80 -- 100 ரூபாய்க்கும், சில்லரை விலையில் ஒரு செடி கொண்ட மஞ்சள் கொத்து 15 ரூபாய்க்கும், இஞ்சி கொத்து ஒன்று, 30 ரூபாய்க்கும் விற்பனையாகின.
காய்கறிகளை பொறுத்த வரை, சந்தைக்கு நேற்று, 80 லட்சம் கிலோ காய்கறிகள் வந்தன. இது, தினசரியை விட 20 லட்சம் கிலோ அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
காய்கறிகள் வரத்து அதிகமாக இருந்தும், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் வரத்து அதிகரிப்பால், காய்கறி விற்பனை களைகட்டியதுடன், விலையும் அதிகரித்து காணப்பட்டது.
இதில், மொச்சைக்காய் கிலோ 120, சர்க்கரை வள்ளிக்கிழங்கு கிலோ, 40 ரூபாய்க்கும், அவரைக்காய் கிலோ 60 ரூபாய்க்கும், கருணைக் கிழங்கு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனையாகின.
மேலும், சாமந்தி பூ, 80 -- 120, பன்னீர் ரோஸ் 120 -- 140 ரூபாய்க்கும், சாக்லேட் ரோஸ், 180 -- 200 ரூபாய்க்கும், மல்லி - 3,000 ரூபாய்க்கும், ஜாதி -1,800 ரூபாய்க்கும், கனகாம்பரம் 800 -- 1,000 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதனால் மல்லிப்பூ வரத்து குறைவால், நிலக்கோட்டையில் இருந்து ஐஸ் மல்லி கொண்டு வரப்பட்டது.
இது குறித்து சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் முத்துகுமார் கூறுகையில், ''கோயம்பேடு சந்தைக்கு வழக்கத்தை விட, 20 லட்சம் கிலோ காய்கறிகள் அதிகம் வந்துள்ளன.
''இதில், பொங்கல் பண்டிகைக்கு படைக்கும் சிறப்பு காய்கறிகளும் அடங்கும். கடந்தாண்டு, 450 -- 600 ரூபாய்க்கு கரும்பு விற்பனையானது. இந்தாண்டு அதை விட குறைவாக விற்பனை செய்யப்படுகிறது,'' என்றார்.
1,200 போலீசார் பாதுகாப்பு
மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் கண்காணிப்பு கோபுர செயல்பாட்டை, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று திறந்து வைத்தார்.
மேலும், மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலும், இரவு நேரங்களில் எளிதில் பொதுமக்கள் அடையாளம் காணும் வகையிலும் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் 'சிசிடிவி' கேமரா வசதியுடன் கூடிய நான்கு 'சோலார் பவர்டு அவுட் போஸ்ட்'கள் அமைக்கப்பட்டுள்ளன.
பண்டிகை காலங்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடும்போது, பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதுடன், அவசர தேவைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பற்றியும் புகார்கள் தெரிவித்து, அவர்களை கண்டுப்பிடிப்பதற்கு, காவல் உதவி மையங்கள் முக்கிய பங்காற்றும்.
காணும் பொங்கலை முன்னிட்டு, கடற்கரை பகுதிகளில், 1,200 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவர். கடலில் குளிப்பவர்களை கண்காணித்தல், தடுத்தலுக்கு ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் இருந்து வெளியூர் செல்வோரின் பாதுகாப்புக்காக, கோயம்பேடு பகுதியில் மட்டும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி பணிபுரியும், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பொங்கல் பண்டிகைக்காக கார், பேருந்து, ரயிலில், சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கான வாகனங்கள், ஜி.எஸ்.டி., சாலையில் நுழைந்ததால், இரும்புலியூர் முதல் பெருங்களத்துார் வரை, கடந்த இரு நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து சென்றன. இரும்புலியூரில் இருந்து பெருங்களத்துாரை கடக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. தாம்பரம் சானடோரியத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதும், நெரிசலுக்கு காரணமாக அமைந்தது. நேற்று இரவு, இந்த நெரிசல் மேலும் அதிகரித்து, மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு, வண்டலுார் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்காக்கள், பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு தயாராகி உள்ளன.இதனால், கூட்டத்தை சமாளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வண்டலுார் பூங்காவில் கூடுதலாக 'டிக்கெட் கவுன்டர்'கள் அமைக்கப்பட்டு உள்ளன.பார்வையாளர்கள் பாதுகாப்பை கருத்தில் வைத்து, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காணும் பொங்கலான நாளை மறுநாள் 50 முதல் 70 ஆயிரம் பேர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோன்று, கிண்டி சிறுவர் பூங்காவிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஆவடி சிறப்பு காவல் பயிற்சி இரண்டாம் படை பிரிவில், பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு பங்கேற்று புதுப்பானையில் பொங்கலிட்டு, பறை அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நிகழ்ச்சியில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
* சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம், கொச்சின்ஹவுஸ் புதிய காவல் குடியிருப்பு, புனித தோமையர்மலை ஆயுத்தபடை மைதானம் ஆகிய பகுதிகளில், போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் பொங்கலிட்டு, கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மகிழ்ந்தார்.
மாசு இல்லை
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்:டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
சென்னையில் 13 ம் தேதி காலை 8:00 மணி முதல் நேற்று காலை 8:00 மணி வரை காற்று தரம் அளவீடு செய்யப்பட்டது. அதில் அனுமதிக்கப்பட்ட தர அளவான 80 மைக்கிராமுக்கு உட்பட்டு இருந்தது. பெரியளவில் பிளாஸ்டிக் குப்பை, கழிவுகள், எரிக்கப்படாததால் விமானம் , மெட்ரோ ரயில்சேவை, ஆகியவை பாதிக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.