தேவிபட்டினம்,-தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையில் பூட்டி இருக்கும் சிறுவர் பூங்காவை பயன்பாட்டிற்கு திறக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தினர்.
தேவிபட்டினம் கடலுக்குள் நவபாஷாண நவக்கிரக கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள நவபாஷாணத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யவும், திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் குழந்தைகள் பயனடையும் வகையில் நவபாஷாண கடற்கரைப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு சில ஆண்டுகள் மட்டுமே செயல்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பயனற்ற நிலையில் பூட்டப்பட்டுள்ளது.
இதனால், நவபாஷாண கடற்கரை வரும் சுற்றுலாப் பயணிகள் பூங்காவை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். பல லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அரசு நிதி வீணடிக்கப்பட்ட நிலையில் பூட்டி கிடக்கும் சிறுவர் பூங்காவை திறக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.