சிவகங்கை,-சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் அமைந்துள்ள பாண்டியன் கோட்டை குறித்து தொல்லியல் அலுவலரிடம் ஆய்வறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராஜா, செயலாளர் நரசிம்மன் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் காளையார்கோவில் மேட்டுப்பட்டியில் உள்ள பாண்டியன் கோட்டையை அகழாய்வு செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்திருந்தனர்.
பாண்டியன் கோட்டையானது சங்க கால இலக்கிய சிறப்பும் பாண்டியநாட்டு திருத்தலங்களில் பதினான்கினுள் ஒன்றாகும், சிறப்பு மிக்க நகரமாக இயங்கி வரும் திருக்கானப்பேர் எனும் காளையார்கோவிலில் தொன்மையான மேடாக பாண்டியன் கோட்டை சங்க கால எச்சமாக உள்ளது.
வட்டவடிவமான கோட்டையில் ஆழமான அகழி இன்றும் காணப்படுவதோடு கோட்டையின் நடுவில் நீராவி குளமும் காணப்படுகிறது.
37 ஏக்கரில் இந்த கோட்டை மேட்டுப்பகுதியாக காணப்படுகிறது. இதன் அருகேயுள்ள ஊரும் மேட்டுப்பட்டி என வழங்கப்படுகிறது. பிற்காலங்களில் இங்கு நாணயச்சாலை இயங்கி வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கோட்டையில் காவல் தெய்வங்களான கோட்டை முனீஸ்வரர், வாள்மேல் நடந்த அம்மன் கோயில் காணப்படுகிறது.
மிகப் பழமையான சங்ககால செங்கல் எச்சங்கள், கீழடியில் கிடைத்தது போல் கையால் செய்யப்பட்ட மேற்கூரை ஓட்டு எச்சங்கள், சிறுவர்கள் விளையாடும் வட்ட சில்லுகள், சிறிய அளவிலான பந்து போன்ற மண் உருண்டைகள் கிடைத்துள்ளன. கருப்பு சிவப்பு நிற பானை ஓட்டில் மோசிதபன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்திருப்பது கீழடி போன்ற வரலாற்றினை இப்பகுதியில் அகழாய்வு செய்தால் பாண்டியர்கள் கட்டுமானங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது, என தெரிவித்திருந்தனர்.
இதன் பேரில் தொல்லியல் துறை ஆணையாளர் சிவானந்தம், பாண்டியன் கோட்டை குறித்து மாவட்ட தொல்லியல் அலுவலரிடம் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ளார். பாண்டியன் கோட்டையில் அகழாய்வு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராஜா தெரிவித்ததாவது:
தொல்லியல் துறை அமைச்சரிடம் பாண்டியன் கோட்டை அகழாய்வு குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் பேரில் தொல்லியல் அலுவலரிடம் ஆய்வறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அகழாய்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது, என்றார்.