சிவகங்கை,-சிவகங்கை குண்டூரணியில் தேங்கியுள்ள குப்பை கழிவை அகற்றாமல் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை நகராட்சி, 24 வது வார்டு குண்டூரணியில் ரூ.35 லட்சம் செலவில்,ஊரணியை துார்வாரி, ஊரணியை சுற்றிலும் பேவர் பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் நேற்று துவங்கின.
குண்டூரணிக்குள் தேங்கியுள்ள குப்பை கழிவை முற்றிலும் அகற்றாமல், பழைய பிளாஸ்டிக்,கழிவு துணி குப்பைக்கு இடையே சிமென்ட் கான்கிரீட் போட்டு பணிகளை துவக்கியுள்ளனர்.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குண்டூரணிக்குள் தேங்கிய குப்பை கழிவுகளை முற்றிலுமாக அகற்றிய பின், ஊரணியின் நான்கு பகுதியிலும் மண் அரிப்பு ஏற்படாத வகையில் கான்கிரீட் சுவர் எழுப்பி, பின்னரே பேவர் பிளாக் சாலை போட்டால் தான் தரமானதாக இருக்கும் என தெரிவித்தனர்.
கவுன்சிலர் கீதா கார்த்திகேயன் கூறியதாவது:
பணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கமிஷனர் பாண்டீஸ்வரி பார்வையிட்டார். அவரிடம் குண்டூரணிக்குள் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றி, கிராவல் மண் கொட்டிய பின் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம், என்றார்.