தமிழ் மொழியில் மட்டுமே, ஒவ்வோர் ஓசைக்கும் ஏற்ப, ஒலி வடிவம் தாங்கிய எழுத்துகள் உள்ளன. உயிரும், மெய்யும் கலந்து, உயிர்மொழியாகி நிற்பது தமிழ் எழுத்துகளே. அதனால்தான், ஒரு விஷயத்தை சுருக்கியும், விரித்தும் சொல்ல, தமிழால் முடிகிறது.
தமிழை சுவைக்க ரசனை வேண்டும். தடாகத்திலுள்ள தாமரை பூக்களின் தேனை அங்குள்ள தவளைகள் அறியாது. ஆனால், எங்கோ இருக்கும் வண்டுகள் அறியும்.
புத்தக வாசிப்பு பழக்கம் இருந்தால், இளமையோடு வாழலாம். நுாறாண்டு வாழ்வதற்கு மருந்துகள் தேவையில்லை; புத்தகங்கள் போதும். இந்த புத்தக சந்தையில் வாங்கப்படும் புத்தகங்கள், பல இடங்களுக்கு பயணப்படும்.
உலகத்தின் பல நாடுகளுக்கும் செல்லும். நல்லவை கூறும் புத்தகங்களே வெளிவர வேண்டும். சமூகத்தை கெடுக்கும் புத்தகங்கள் வெளிவராமல் தடுக்க வேண்டும்.
கல்லுக்குள் இருக்கிற சிற்பம் வெளிப்படுவதற்கு அதை செதுக்க வேண்டும். அதுபோல நமக்குள் இருக்கிற ஆற்றலை, திறமையை வெளிக்கொண்டுவர, நம் மனதை செதுக்க வேண்டும். அதற்கு உளியாக பயன்படுபவை புத்தகங்கள் மட்டுமே.
புத்தகங்கள் அழாது, சிரிக்காது, நடக்காது. ஆனால், தன்னை வாசிக்கிறவர்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும். நம்மை அறியாமலேயே நம்மை செதுக்கி பக்குவப்படுத்தக்கூடிய பிரம்மாக்கள் புத்தகங்கள்தான்.
சென்னை நந்தனத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சி கருத்தரங்கில், 'நம்மை செதுக்கிய புத்தகங்கள்' எனும் தலைப்பில், புதுகை சா.பாரதி, இவ்வாறு உரையாற்றினார்.
- நமது நிருபர் -