சிவகங்கை மாவட்டம் விவசாய தொழிலை அடிப்படையாக கொண்ட மாவட்டமாகும். இங்கு நன் செய் நிலங்களாக 11 ஆயிரத்து 668 எக்டேரும், 2 லட்சத்து 6 ஆயிரத்து 890 ஏக்கர் புஞ்சை நிலங்கள் உள்ளன.
மாவட்டத்தில் 4323 கண்மாய்களும், 4598 ஊருணிகளும் உள்ளன. இந்த கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நிரினை பயன்படுத்துவோர் சங்கத்தலைவரும், உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கண்மாய் மேம்படுத்துவது, நீர் நிலைகளை புனரமைப்பு செய்வது, வரத்துக்கால்வாய்களை சீரமைப்பது, என அனைத்து பணிகளையும் செய்வதற்கு நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகளிடம் கலந்து பேச வேண்டும். மத்திய, மாநில அரசு நிதி மூலம் செய்யப்படும் அனைத்து பணிகளையும் நிர்வாகிகளை கலந்து பேசாமல் செய்யக்கூடாது.
ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இது போன்று நிர்வாகிகளை அணுகுவதும் கிடையாது, கருத்துக்களை கேட்பதும் கிடையாது. தொடர்ந்து நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகளை புறக்கணிப்பு செய்து வருகின்றனர். இது குறித்து கலெக்டர் மதுசூதனரெட்டியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கா.கருப்பையா, நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர், செங்குளிப்பட்டி: நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினரிடம் பொதுப்பணித்துறையினர் எந்த கருத்தும் கேட்காமல் கண்மாய் புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இது ஜனநாயகத்துக்கு முரணானது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கும், தமிழக ஆளுநருக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. வரும் காலங்களில் நிர்வாகிகளை கலந்து ஆலோசித்த பின்னரே பணிகளை செய்ய வேண்டும், என்றார்.