திருப்புவனம்,--திருப்புவனம் வட்டாரத்தில் அறுவடை இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் பிரமனூர், பழையனூர், பூவந்தி உள்ளிட்ட பகுதிகளில் 4 ஆயிரம் எக்டேரில் கோ 43, கோ 50, என்.எல்.ஆர்., உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக பயிரிட்ட விவசாயிகள் தற்போது அறுவடை தொடங்கியுள்ளனர். நெல் அறுவடைக்கு பெரும்பாலும் இயந்திரங்களையே நம்பியுள்ளனர்.
ஒரு ஏக்கர் அறுவடை செய்ய செயின் வண்டிக்கு மூவாயிரம் ரூபாயும், டயர் வண்டிக்கு 2 ஆயிரத்து 200 ரூபாயும் டீசல் உள்பட வாடகை வசூலிக்கப்படுகிறது. விளைச்சல் கண்டுள்ள நிலையில் போதிய அறுவடை இயந்திரங்கள் வராததால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் கூறுகையில்: திருப்புவனம் வட்டாரத்தில் அறுவடை இயந்திரங்கள் இடைத்தரகர்கள் மூலமாகவே சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரவழைக்கப்படுகிறது. தொடர்ச்சியாக அறுவடை இல்லாததால் பெரும்பாலான இயந்திரங்கள் தஞ்சாவூர், தேனி உள்ளிட்ட அதிகம் நெல் விளையும் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
திருப்புவனம் வட்டாரத்தில் ஒருசில இடங்களில் மட்டுமே அறுவடை தொடங்கியுள்ளதால் இயந்திரங்கள் வரமறுக்கின்றன. மாவட்ட வேளாண் துறை மூலம் அறுவடை இயந்திரம் ஏக்கருக்கு 900 ரூபாய் என்றவிகிதத்தில் வாடகைக்கு இயக்கப்பட்டது. இயந்திரம் பழுதானதால் கடந்த சில வருடங்களாகவே வருவதில்லை .
எனவே விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் புதிய இயந்திரம் வாங்க வேண்டும், பழைய இயந்திரத்தை பழுது நீக்கி இயக்க வேண்டும், என்றனர்.