சென்னை:காணும் பொங்கலன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து மாநகர பேருந்துகளையும் முழு அளவில் இயக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
காணும் பொங்கலன்று, குடும்பத்தோடு அனைவரும் வெளியே சுற்றுலா இடங்களுக்கு சென்று வருவது வழக்கம். சென்னையில் வண்டலுார் பூங்கா, மாமல்லபுரம், மெரினா, பெசன்ட்நகர் கடற்கரைகள், பொருட்காட்சி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு இடங்களுக்கு மக்கள் அதிகளவில் செல்வர்.
எனவே, மக்களின் தேவைக்கு ஏற்றாற்போல, மாநகர பேருந்துகளை முழு அளவில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழகம் கிளை மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 'ஜன., 17ல் அனைத்து பணியாளர்களும் பணிக்கு வந்து, 'ஸ்பேர் பஸ்' உள்ளிட்ட 3,368 மாநகர பேருந்துகளையும் முழு அளவில் இயக்க வேண்டும்.
எந்தவித புகாரும் இல்லாத அளவில் பேருந்துகள் இயக்கத்தை உறுதி செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.