சென்னை:சென்னை சாலையோரங்களில் நின்றிருந்த வாகனங்கள் நேற்று முன்தினம் தணிக்கை செய்யப்பட்டது.
அதில், நீண்ட நாட்கள் நின்றிருந்த மூன்று வாகனங்கள் உள்பட 13 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.
ஏற்கனவே கேட்பாரற்று உரிமை கோராமல் இருந்த 297 இருசக்கர வாகனங்கள், 15 ஆட்டோக்கள் என, 312 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ளன.
மேலும், காவல் குழுவினரால் கைப்பற்றப்பட்ட 309 இருசக்கர வாகனங்கள், 15 ஆட்டோக்கள் மற்றும் ஒரு இலகுரக வாகனம் என, 325 வாகனங்களில், 20 வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
உரிமை கோராத மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத 181 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு நடந்த வாகன சோதனையில், 6,412 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன.
அதில், மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 14 வழக்குகளும், முறையான ஆவணங்கள் இல்லாமல் இயக்கியது, போக்குவரத்து வீதிகளை மீறியது தொடர்பாக 84 வழக்குகள் என, 98 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், 'வாகன்' செயலி வாயிலாக 645 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முக அடையாளத்தை வைத்து பழைய குற்றவாளிகள் அடையாளம் காணும் எப்.ஆர்.எஸ். கேமரா வாயிலாக 3,630 நபர்கள் சோதனை செய்யப்பட்டு, இரண்டு பழைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.