மூங்கில் கட்டுமானம் சார்ந்த பயிலரங்கு வகுப்புகள், இந்துஸ்தான் கல்லுாரி அரங்கில் நடந்தது.
வீட்டு கட்டுமானத்தில் இரும்புக்கு மாற்றாக, மூங்கில் பயன்படுத்துவது மட்டுமின்றி, வீட்டின் உள்ளே எளிதாக விளக்குகள், சிட் அவுட், இருக்கைகள் போன்றவற்றை மாணவர்கள் ஆர்வத்துடன் செய்து காட்சிப்படுத்தினர்.
இதுகுறித்து, பேராசிரியர் லட்சுமணராஜா கூறியதாவது:
மூங்கில் கட்டுமானம் என்பது, மிகவும் எளிதானது, செலவை குறைக்க கூடியது. பச்சைத்தங்கம் எனப்படும் மூங்கில் உற்பத்தியில், இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
விழிப்புணர்வு குறைவால், கட்டுமானத்தில் அதிகம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.ஆர்.சி.சி., கட்டடத்தில், இரும்புக்கு பதில், அதற்கு இணையான வலிமை கொண்ட மூங்கிலை, தாராளமாக பயன்படுத்தலாம். இதன் வாயிலாக, ஸ்டீல் செலவில் 50 சதவீதத்தை குறைக்க முடியும். ஏழை, எளிய மக்கள் குறைந்த செலவில் வீட்டை முழுமையாக கூட வடிவமைத்துக்கொள்ள முடியும். தவிர, அலங்கார கூரைகள், விளக்குகள், இருக்கைகள் என பலவற்றை செய்யலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.