கோவை:கோவை மாநகராட்சி நிர்வாக அலுவலர்கள் ஆறு பேருக்கு, உதவி கமிஷனர் பதவி உயர்வு வழங்க, தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் தொகை அடிப்படையில், மாநகராட்சிகளுக்கு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை நியமித்து, சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாநகராட்சிக்கு இரண்டு துணை கமிஷனர்கள் நியமிக்க வேண்டும். ஒருவர் நிர்வாக பணியும், இன்னொருவர் சுகாதாரப்பணியும் மேற்கொள்வார்.
இருவரில் ஒருவரை, ஐ.ஏ.எஸ்., அல்லது டி.ஆர்.ஓ., அல்லது துணை செயலர் அந்தஸ்தில், மாநகராட்சி துணை கமிஷனராக நியமிக்க வேண்டும். இன்னொருவரை, மாநகராட்சியில் ஐந்தாண்டுகள் உதவி கமிஷனராக வார்டு பணி, நிர்வாகம், வருவாய் மற்றும் கணக்குப்பிரிவில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களை நியமிக்க வேண்டுமென, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதில், தற்போதைய உதவி கமிஷனர் (கணக்கு) சுந்தர்ராஜன், உதவி கமிஷனர் (வருவாய்) செந்தில்குமார் ரத்தினம் ஆகியோருக்கு, துணை கமிஷனர் பதவி உயர்வு வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இவ்விருவரில் ஒருவருக்கு, கோவை மாநகராட்சியில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும்; இன்னொருவரை, மற்ற மாநகராட்சிகளில் ஏற்படும் காலி பணியிடத்தில் நியமிக்க வாய்ப்புள்ளது.
அடுத்த கட்டமாக, உதவி கமிஷனர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் பட்டியல் அனுப்ப, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகம் கேட்டது. அதன்படி, நிர்வாக அலுவலர்கள் கணேஷ்குமார், மாணிக்கம், தமிழ்வேந்தன், மகேஷ் கனகராஜ், உஷாராணி, நுார்அகமது ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மக்கள் தொகை அடிப்படையில், கோவை மாநகராட்சிக்கு, 301 பணியிடங்களே அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போது பணிபுரியும் அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கி, ஒவ்வொரு பணியிடத்துக்கும் தகுதியானவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்' என்றனர்.