வேளச்சேரி:சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் சரவணன், 24. இவர், 8ம் தேதி மாலை, வேளச்சேரி, தண்டீஸ்வரத்தில் உள்ள கோட்டக் மஹிந்திரா ஏ.டி.எம்., மையத்திற்கு சென்றார்.
அங்கு, தன் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்காக, இரண்டு 500 ரூபாய் கட்டு நோட்டுக்களை எடுத்து சென்றிருந்தார்.
இதில், 58 ஆயிரம் ரூபாயை 'டெபாசிட்' செலுத்திய நிலையில், 'மொபைல் போன்' அழைத்ததால் பேசியபடியே, 50 ஆயிரம் ரூபாய் கட்டை, ஏ.டி.எம்., இயந்திரத்தின் மீது வைத்துச்சென்றார்.
சிறிது நேரத்தில், அதே ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க வந்த, 'ஸ்விக்கி' உணவு டெலிவரி ஊழியர்கள், கார்த்திகேயன், மாசிலாமணி ஆகியோர் ஏ.டி.எம்., மிஷின் மீதிருந்த பணத்தை பார்த்தனர். அதை எடுத்து, வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தன் வங்கிக் கணக்கை, மொபைல் போனில் சரவணன் சரிபார்த்தபோது, இயந்திரத்தின் மீது பணம் வைத்தது ஞாபகத்திற்கு வந்தது. விரைந்து சென்று ஏ.டி.எம்., காவலாளியிடம் விசாரித்தார்.
அவரது பணம் காவல் நிலையத்தில் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு சென்று பணத்தை பெற்றுக் கொண்டார். நேர்மையாக செயல்பட்டு, பிறருக்கு முன்னுதாரணமாக மாறிய கார்த்திக்கேயன், மாசிலாமணியை, வேளச்சேரி போலீசார் பாராட்டினர்.