கவுண்டம்பாளையம் மீனாட்சி நகர் பகுதியில், கர்லா கட்டை செய்யறவங்க வீடு எனக் கேட்டால், உடனே கை காட்டுகிறார்கள். மலையாள வாசனையோடு வாங்க என்கிறார் ஆறுமுகம். கேரளம் பூர்விகம். 70 ஆண்டுகளாக தமிழகத்தில்தான் வாசம்.
தச்சுத் தொழில் பரம்பரையா எனக்கு கைவந்தது. முதல்ல நிறைய கம்பெனிகள்ல வேலை செஞ்சேன். அப்புறம், தனியா வேலைக்குப் போனேன். கட்டில், பீரோ, அலமாரினு எல்லா மர வேலையும் செய்வேன். வெளி வேலை இல்லாதபோதும், யாராவது கேட்கும்போதும் கர்லா கட்டை செஞ்சு குடுப்பேன்.
இப்போ, கொரோனா காலத்துலதான் முழு நேரமும் கர்லா கட்டை செய்ய ஆரம்பிச்சேன். வயசாயிடுச்சு. கால் வலிக்கறதால, உக்காந்து வேலை செய்ய முடியாது. அதனால, வேலைக்குப் போகாம வீட்ல இருந்தே கர்லா கட்டை செய்யறேன்.
நானே மரம் வாங்கி செஞ்சு விக்கிறேன். வேப்பங் கட்டைகள்தான் நல்ல தேர்வு. பொதுவா, 2 கிலோல இருந்து 7 கிலோ வரைக்கும் செய்வேன். 13 கிலோவும் செஞ்சு குடுத்துருக்கேன்.
சின்னவங்க, பெரியவங்க எல்லாரும் வாங்கிட்டுப் போறாங்க. 850 ரூபாய்ல இருந்து 2,000 ரூபாய் வரைக்கும் விற்கிறேன். எனக்கு கூலி கிடைச்சாப் போதும். அவங்க கொண்டு வர மரத்துலயும் கடைஞ்சு குடுக்கறேன்.
கொரோனாவுக்குப் பிறகு ஆரோக்கியத்து மேல, கொஞ்சம் கவனம் வந்துருக்குனு நெனைக்கிறேன். கர்லா சுத்துனா தோளும், கையும் வலுவடையும். ரத்த ஓட்டம் சீரா இருக்கும். முதுகுப்பிடிப்பு பிரச்னை வராது.
சில சமயம் வாரத்துல 7,8 விக்கும். சில சமயம் ஒண்ணு, ரெண்டுதான் போகும். வயசானவங்க, பிடி கர்லானு சொல்ற உருண்டை ரகத்தை வாங்குவாங்க. வாக்கிங் போகும்போது அப்படியே பிடிச்சுட்டு நடப்பாங்க. ஜிம்ல இருந்து யாரும் வாங்குறது இல்ல.
நாங்க செய்றத கேள்விப்பட்டு, வந்து வாங்கிட்டுப் போறாங்க. சில பள்ளிக்கூடங்கள்ல, குழந்தைகளுக்காக 1 கிலோ கர்லா கட்டைகளை ஆர்டர் செஞ்சு வாங்கறாங்க.
உடம்புல தெம்பு இருக்கற வரைக்கும் உழைச்சு சாப்பிடணும். குடும்பத்துக்கு உதவணும்.
மேலே படிந்திருக்கும் மரச்சில்லுகளை உதறியபடி, முதுமையின் தள்ளாட்டத்தை ஆசுவாசப்படுத்திக்கொண்டே, சிரிப்பு மாறாமல் பேசுகிறார் ஆறுமுகம்.
தொடர்புக்கு... 94899 71507