கோவை:வனத்துறையில் பணியாற்றும் 12 வனக்குழுக்களுக்கும், ரோந்து செல்வதற்கென பிரத்யேக வாகனங்கள் ஒதுக்கப்படவுள்ளது.
கோவை வனக்கோட்டம், மொத்தம் 670 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இதில், கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெ.நா.பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை என ஏழு வனச்சரகங்கள் உள்ளன.
இதில், பெரும்பாலான வனச்சரகங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் உலா வருவது தொடர்கதையாகியுள்ளது. விவசாய நிலங்களை நாசம் செய்வது, குடியிருப்புகளுக்குள் புகுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கவும், வனத்துக்குள் விரட்டவும், வன எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும், மொத்தம், 12 வனக்குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இவர்களுக்கென போதிய வாகன வசதிகள் இல்லாததால், உரிய நேரத்திற்குள் சென்று யானைகளை விரட்ட முடிவதில்லை. இதனால், விவசாயிகளுக்கும், வனத்துறையினருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
கோவை மாவட்ட வன அதிகாரி கூறுகையில், 'வனப்பகுதியில் ரோந்து செல்வதற்கென, பவுண்டரி நைட் பாட்ரோல் டீம், (பி.என்.பி.டி) எனும் 12 வனக்குழுக்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், வனப்பகுதிக்குள் செல்லும்போது, 20க்கும் மேற்பட்ட பாதுகாப்பு கருவிகள் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
எனவே, வனக்குழுக்கள் ரோந்து செல்வதற்கென, புதிதாக வாகன வசதி ஏற்படுத்தி தரக்கோரி, அரசாங்கத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
'ஒப்புதல் கிடைத்ததும், அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்' என்றார்.