அன்னூர்:பள்ளிக்கல்வித்துறை நடத்தும் விளையாட்டுப் போட்டியில், நவீன சைக்கிள்களுடன் போட்டி போட முடியாமல், அரசு பள்ளி மாணவர்கள் தவிக்கின்றனர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் குறு மையம், கல்வி மாவட்டம், மண்டலம் மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகின்றன.
சைக்கிள் வீரர்களின் பெற்றோர் கூறுகையில், 'அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றாக, சைக்கிள் போட்டிகள் நடத்தப்படுகின்றன, இதில் மாவட்ட அளவில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவர், மாணவியர் என ஆறு பிரிவுகளில் ஒரு பிரிவில் கூட, அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பெறவில்லை.
இதற்கு காரணம், மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மூன்று லட்சம் முதல் ஐந்து லட்ச ரூபாய் வரையிலான, கார்பன் வீல் பொருத்தப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட 10 கியர்கள் உள்ள சைக்கிள்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் வெறும், 5,000 ரூபாயிலான ஒரு கியர் மட்டும் உள்ள, சாதாரண சைக்கிள்களை பயன்படுத்துகின்றனர்.
நவீன சைக்கிள்களை ஓட்டும், மெட்ரிக் பள்ளி மாணவர்களுடன் அரசு பள்ளி மாணவர்களால் போட்டி போட முடிவதில்லை. போட்டிகளில் அனைத்து பிரிவு மாணவர்களும், ஒரே மாடல் சைக்கிள் பயன்படுத்த, விளையாட்டுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அல்லது அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும் போட்டிகள் நடத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.