-நமது நிருபர்-
பத்தாண்டுகளுக்கும் மேலாக இழுபறியாகி வரும் கோவை மேற்கு புறவழிச்சாலைத் திட்டத்தில், முதற்கட்டமாக ரோடு அமைக்கும் பணிக்கு, இந்த மாத இறுதியில் டெண்டர் விடப்படவுள்ளது.
2006-2011 இடையிலான தி.மு.க., ஆட்சியின்போது, முதல் முறையாக கோவைக்கு மேற்கு புறவழிச் சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க., ஆட்சி மாறிய பின், அதே திட்டம் மீண்டும் அறிவிக்கப்பட்டு, துாரம் அதிகரிக்கப்பட்டது. ஆனால் முதல் ஐந்தாண்டு ஆட்சியில் எந்தப் பணியும் துவங்கவில்லை.
மீண்டும் 2016ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின்பே, நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது. அப்போது துவங்கிய பணி, இப்போது வரையிலும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
பாலக்காடு ரோட்டில் மைல்கல் அருகே துவங்கி, மேட்டுப்பாளையம் ரோட்டில் கூடலுார் வரையிலும் 32.43 கி.மீ., துாரத்துக்கு அமையும் இந்த ரோடுக்கு, 15 வருவாய் கிராமங்களில் அரசு நிலம் 57 ஏக்கர் உட்பட 361 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.
நிலம் கையகப்படுத்த, 313 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ரோடு அமைக்க, 647 கோடி ரூபாய் செலவாகுமென மதிப்பிடப்பட்டதில், முதல் பகுதி (பேஸ் 1) ரோடு அமைக்கும் பணிக்கு, கடந்த ஆண்டு செப்.,29ல் ரூ.250 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது.
முதல் பகுதியில் ரோடு அமைப்பதற்கு, மதுக்கரை, சுண்டக்காமுத்துார், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம் மற்றும் மாதம்பட்டி ஆகிய ஐந்து வருவாய் கிராமங்களில், 20 ஏக்கர் அரசு நிலம் உட்பட 137 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும்.
இதுவரை 75 சதவீத நிலம் மட்டுமே, இதில் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. நெடுஞ்சாலைப் பணிகளுக்கான நிலங்களைக் கையகப்படுத்த சிறப்புப் பிரிவு துவக்கிய பின்னும், ஆமைவேகத்தில்தான் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
ரோடு போட நிதி ஒதுக்கி, மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அந்த நிதியைப் பயன்படுத்தி, டெண்டர் விடாமலிருப்பது, கோவை மக்களிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தொழில் அமைப்பினர் விரக்தியில் உள்ளனர்.
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், இந்த ஆண்டிலாவது ரோடு அமைக்கும் பணியை விரைவாகத் துவக்க வேண்டுமென்று, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரை கையகப்படுத்திய நிலங்களைத் தவிர்த்து, மீதமுள்ள நிலங்களை விரைவாகப் பத்திரப்பதிவு செய்யவும், உரிமையாளர் விபரமின்றி கையகப்படுத்த முடியாத நிலங்களுக்குரிய பணத்தை கருவூலத்தில் செலுத்தி (அவார்டு பாஸ்) விட்டு, கலெக்டரிடம் சிறப்பு அனுமதி பெற்று பணியைத் துவக்கவும் நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த மாத இறுதிக்குள், முதல் பகுதி பணிக்கு டெண்டர் விடப்படுமென்று, நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.
அதேபோன்று, இரண்டாம் பகுதிக்கான மதிப்பீடும் அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அடுத்த மாதத்திலிருந்து, இரண்டாம் பகுதிக்கான நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கப்படுமென்று, வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
லோக்சபா தேர்தல் வரவுள்ளதால், அதற்குள் முதல் பகுதி பணியை முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கவும், இரண்டாம் பகுதி பணியைத் துவக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளதால், இந்த ஆண்டில் பணிகள், இன்னும் வேகமெடுக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.