கோவை:கோவை மாநகர போலீசார் பி.ஆர்.எஸ்., மைதானத்தில், குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினர். அனைவரும் கும்மி அடித்து பொங்கல் பாட்டு பாடினர்.
இவ்விழாவில் மாநகர காவல் துறையை சேர்ந்த போலீசார், தங்களது குடும்பத்துடன் கோலமிட்டு தனித்தனியாக பொங்கல் வைத்து, படையல் இட்டு சூரிய வழிபாடு மேற்கொண்டனர்.
இதில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் குடும்பத்துடன் பங்கேற்று, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
அன்னுார், போலீஸ் ஸ்டேஷனில், மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாலாஜி, இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் மூன்று ரேக்ளா வண்டிகளை ஓட்டி, பொங்கல் விழாவை துவக்கி வைத்தனர்.
டி.எஸ்.பி., முதல் காவலர் வரை, அனைவரும் ஒரே மாதிரியான பாரம்பரிய உடை அணிந்து வந்து, பங்கேற்றனர். கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி ஆகியவை நடந்தன. அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
ஒட்டர்பாளையம் ஊராட்சி, அல்லிக்காரம்பாளையத்தில், ஊர் பொதுமக்கள் சார்பில், சிறுவர், சிறுமியருக்கு ஓட்டம், பலூன் ஊதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.