தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: கவர்னரிடம் நிலுவையில் உள்ள, 15 மசோதாக்களில், 12 மசோதாக் கள், ஒரே விஷயத்துக்காக இயற்றப்பட்டவை. அரசு பல்கலைகளின் வேந்தராக தற்போது கவர்னர் உள்ளார். அதை மாற்றி, முதல்வரை வேந்தராக்குவதற்கான சட்ட திருத்த மசோதாவை அனுப்பி உள்ளனர். அதாவது, 12 பல்கலைகளுக்கு தனித்தனியாக, 12 மசோதாக்களை அனுப்பியுள்ளனர்.
டவுட் தனபாலு: அடடா... 'கவர்னர் இத்தனை மசோதாக்களை கிடப்புல போட்டு வச்சிருக்கார்'னு ஆளுங்கட்சியினர் செய்த பொய் பிரசாரத்தின் பின்னணி இப்பத்தானே புரியுது... மொத்தமா ஒரே மசோதாவா தாக்கல் செஞ்சு அனுப்பியிருந்தா, அரசாங்கத்துக்கு பேப்பர் செலவாவது மிஞ்சியிருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: 'தமிழக அரசு பணியில் சேர, அனைத்து போட்டித் தேர்வுகளிலும், தமிழ் மொழித் தாளில், 40 சதவீதத்துக்கும் குறையாமல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும்' என்ற சட்ட மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
டவுட் தனபாலு: நல்ல சட்டம் தான்... இல்லை என்றால், ஏற்கனவே மற்ற தனியார் துறைகளில் கால் பதித்து கலக்கி கொண்டிருக்கும் வட மாநில இளைஞர்கள், அரசு துறை பணிகளையும் மொத்தமா அள்ளிட்டு போயிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்: அரசு மருத்துவ காப்பீடு தொகை, 2 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. முன், 1,455 சிகிச்சைகள் மட்டுமே வழங்கப்பட்டன. தற்போது, 1,513 சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மருத்துவமனைகளின் எண்ணிக்கையும், 970ல் இருந்து, 1,775 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும், 1,500 கோடி வீதம், ஐந்து ஆண்டுகளுக்கு, 7,500 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
டவுட் தனபாலு: நீங்க என்ன தான் ஏழைகள் சிகிச்சைக்கு என, பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கினாலும், தனியார் மருத்துவமனைகள்ல சிகிச்சைக்கு சேர்ந்தவங்களிடம், 'எக்ஸ்ட்ரா' பணத்தை வம்படியா வசூலிக்கவே செய்றாங்க... இதுல, 'டவுட்' இருந்தா, உங்க ஆட்களையே நோயாளிகள் போல அனுப்பி சோதனை பண்ணி பாருங்க!