புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி:
கவர்னர் ரவி
விவகாரத்தில், தமிழக அமைச்சர்கள் ஜனாதிபதி முர்முவிடம் முறையிட்டதன்
வாயிலாக, தமிழகத்துக்கு மேல் மத்திய அரசு என்ற ஒன்று இருப்பதையும், கவர்னர்
தான் இவர்களை ஆட்டிப் படைக்க வேண்டும் என்பதையும் ஒப்புக்கொள்வதை
காட்டுகிறது.
வாஸ்தவம் தான்... அதனால் தானே, 'டீச்சர் என்னை கிள்ளிட்டான்' என்ற கதையா, ஜனாதிபதியிடம் போய் கண்ணை கசக்கியிருக்காங்க!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: வடசென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி, கவர்னரை மிகவும் தரக்குறைவாக பேசி உள்ளார். 'கொஞ்சம் கண் ஜாடை காட்டி இருந்தால், கவர்னர் வீட்டுக்கு போயிருக்க முடியுமா? சட்டசபைக்குள் கொலையே நடந்தாலும், கேஸ் போட முடியாது' என்றும் பேசி உள்ளார். ஆர்.எஸ்.பாரதியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, முதல்வர் உத்தரவிட வேண்டும். இல்லையேல், தி.மு.க.,வுக்கு ஆபத்து தான்.
ஆர்.எஸ்.பாரதி உருவத்தில் தான், தி.மு.க., ஆட்சிக்கு ஆபத்து வரும் என இருந்தால், அதை தடுக்க யாரால் முடியும்?
தமிழருவி மணியன் தலைமையிலான, காமராஜர் மக்கள் கட்சியின் பொதுச் செயலர் குமரய்யா அறிக்கை:
கவர்னர் உரையின் முதல் பக்கத்தில், 1960களில், மற்ற பெரிய மாநிலங்களோடு ஒப்பிடும் போது, சமூக, பொருளாதார, கல்வி மருத்துவ குறியீடுகளில் பின் தங்கி இருந்த மாநிலமாக தமிழகம் குறிப்பிடப்பட்டுள்ளது. அது, ஓமந்துார் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர் ஆட்சி காலம் அல்லவா? கவர்னர் அறிக்கையில் குறிப்பிடும் சமூக, பொருளாதார, கல்வி குறியீடு களில் வலுவான அடித்தளம் அமைந்தது, அவர்களின் ஆட்சியில் தானே. உண்மைக்கு மாறாக, உரை எழுதி தந்த எழுத்தாளர் யார். முதல்வரும், சபாநாயகரும் படித்து பார்க்கவில்லையா. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் மவுனம் சாதித்தது ஏன்?
காங்., பாரம்பரியம் தெரியாத செல்வப்பெருந்தகை போன்றவர்கள், சட்டசபை காங்., தலைவராக இருந்தால், அந்தக் கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
தமிழக முதன்மை கணக்காயர் நெடுஞ்செழியன் பேட்டி: தமிழகத்தில் பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்களை, முழுதும் கணினிமயமாக்கும் திட்டம், மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020 - 21 வரை கணினிமயமாக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து தணிக்கை செய்யப்பட்டது.
இணையதள பட்டா பரிமாற்ற மனுக்களின் மீதான நடவடிக்கையை ஆய்வு செய்ததில், 66 சதவீத விண்ணப்பங்கள் தவறாக அனுமதிக்கப்பட்டிருந்தன. மேலும், 86 சதவீத விண்ணப்பங்கள் தவறாக நிராகரிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில், நில ஆவணங்களை கணினிமயமாக்கும் திட்ட பணிகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை.
'நிர்வாகத்தில் நம்பர் 1 மாநிலம்' என, மூச்சுக்கு முன்னுாறு தடவை முதல்வர் முழங்குவது எல்லாம் நிஜமில்லையா?