திருப்பூர்:தைப்பொங்கல் பண்டிகையையொட்டி, வீடுகளில் பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். உற்சாகமூட்டிய விளையாட்டு போட்டிகளால், திருப்பூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
அறுவடை திருநாளாகிய தைப்பொங்கல் பண்டிகையை, பொதுமக்கள் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர். ஊரடங்குகளை கடந்து, இந்தாண்டு தைப்பொங்கல் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. வீட்டு வாசலில் கோலமிட்டு, அதிகாலை முதல் பொங்கல் வைக்க துவங்கினர்.
செங்கரும்புகளை தோகையுடன் வைத்து, தீபம் ஏற்றி வைத்து, பானைக்கு மஞ்சள் செடியை கட்டி, சர்க்கரை பொங்கல் வைத்தனர். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, பூக்களால் அலங்கரித்தனர். தலைவாழையில், பொங்கல், பொரிகடலை, அரிசி முறுக்கு, கரும்பு, சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை படைத்து, தீப, துாபத்துடன் விநாயகர் மற்றும் சூரியபகவானை வழிபட்டனர்.
நவகிரகங்களில் நடுநாயமாக விளங்கும் சூரியபகவான், தை 1ம் தேதி, மேஷம் வீட்டில் இருந்து தனது பயணத்தை துவக்குகிறார்; அதன்படி, சூரியபகவானை வழிபடுகின்றனர். சர்க்கரை பொங்கல், அருகே உள்ள வீடுகளுக்கு வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
தலை தைப்பொங்கல் விழா கொண்டாடிய தம்பதியர், பொங்கல் வைத்து, சூரியனை வழிபட்டனர். திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில், போலீசார் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். மண்பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து, 'பொங்கலோ பொங்கல்' என்று கூறி, குளவையிட்டு வழிபட்டனர். பொதுமக்களுக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகரப்பகுதியில், ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் மன்றங்கள், குடியிருப்போர் நலசங்கங்கள், பொதுநல அமைப்புகள் சார்பில், பொங்கல் விளையாட்டு விழா, மூன்று நாட்களுக்கு நடப்பது வழக்கம். பல்வேறு வார்டுகளில், விளையாட்டு போட்டிகள் களைகட்டியிருந்தது.
சிறுவர், சிறுமியருக்கான போட்டிகள், இளைஞர்கள் - இளம்பெண்கள், ஆண்கள் -பெண்கள், முதியோர் என, ஒவ்வொரு வயதினருக்கு ஏற்ற போட்டிகள் நடத்தப்பட்டன. பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் போட்டி, 'லெமன் ஸ்பூன்' போட்டி, 'மியூசிக்கல் சேர்', ஓட்டப்பந்தயம், 'சாக்கு' ஓட்டம், 'ஸ்கிப்பிங்', பலுான் ஊதி உடைத்தல், முறுக்கு கடித்தல் என, விதவிதமான போட்டிகளில், சிறுவர் -சிறுமியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
ஒவ்வொரு வீதிகளிலும், 'மைக் செட்' கட்டி, பாடல்களைஒலிபரப்பினர்.
பா.ஜ., பொங்கல் விழா
திருப்பூர் மாவட்ட பகுதிகளில், பா.ஜ., சார்பில், 'மோடி பொங்கல்' விழா நடந்து வருகிறது. பொங்கல் வழிபாடு மற்றும் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. மண்ணரை சத்யா காலனி பகுதியில், பா.ஜ., சார்பில், நேற்று பொங்கல் விழா நடந்தது; பொதுமக்கள், 60 பொங்கல் வைத்து, பொது வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, சிறுவர் -சிறுமியருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.