காட்டு யானைகளை கும்கிகளாக மாற்றுவது, கும்கிகளின் பாகன்களாவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன்: யானையை காட்சிப் பொருளாக பார்க்கக் கூடாது; யானை என்பது சாமி. இயற்கை காடு எல்லாமே அது தான். யானைகள் இல்லேன்னா காடு பெருகாது. யானைகளுக்கு செரிமான சக்தி குறைவு.
அது, தின்னும் உணவு, அதன் குடலுக்குள் முழுதாக அரைபட்டிருக்காது. விதைகள் அரைபடாமல் அப்படியே முழுசாக இருந்து, லத்தியோடு கலந்து வெளியில் வந்து விடும்.
லத்தியோடு கலந்து வரும் விதைகளுக்கு வீரிய சக்தி அதிகம். அப்படி விழும் விதைகள், சில நாட்களில் முளைத்து விடுகின்றன. இப்படியாக, ஒவ்வொரு யானையும் பல நுாறு விதைகளை, காடுகள் முழுதும் விதைக்கின்றன.
அதுமட்டுமின்றி, யானைகள் ஒடித்துப் போடும் கிளைகளில் உள்ள இலைகளை தின்று தான், மான்கள், காட்டு மாடுகள், பன்றிகள் என, சில உயிரின கூட்டமே உயிர் வாழ்கின்றன. யானை தடத்துலேயே உணவுக்காக காட்டு மாடும், மானும், பன்றிகளும் நடந்து போய் பசியை போக்கி கொள்கின்றன.
மான்கள் நன்றாக கொழுத்து வளர்ந்தால் புலிக்கும், சிறுத்தைகளுக்கும் இரை கிடைக்கும். இப்படி மனிதனும், விலங்குகளும் உயிர் பிழைக்க யானைகள் அவசியம். அது புரியாமல், காட்டோட எல்லைகளை அழித்து, விவசாயம், கட்டடம் என்று உருவாக்குகின்றனர்.
யானைகளுக்கு பார்வை சக்தி கம்மி தான்; ஆனால், மோப்பமும், கேட்கும் திறனும் அதிகம். காத்தில் அடிக்கிற வியர்வை வாசத்தை வைத்தே, நாம் காட்டுக்குள் இருக்கிறோம் என்பதை, சில மைல் துாரத்தில் இருக்கும் யானை கண்டுபிடித்து விடும்.
அந்த சமயத்தில், யானை சுதாரித்து, அங்கிருந்து நகர்ந்து விடும். அதேநேரத்தில், குட்டியோட இருக்கும் யானை பக்கமும், ஒத்தை யானை பக்கமும் போவது ரொம்பவே ஆபத்தானது.
குட்டியை தாக்க வந்துட்டாங்கன்னு நினைத்து, நம்மை தாக்க முயற்சி செய்யும். ஒற்றை யானையானது இணையை தேடிக்கிட்டோ, இணையோடு சேர முடியாத கோபத்திலோ இருக்கும். அப்போது, சிக்குறதும் பெரிய ஆபத்து தான்.
எதிர்பாராமல் யானையிடம் சிக்கி விட்டோம் என்றால், அதன் பார்வையில் இருந்து துாரமாக விலகிப் போய் விட வேண்டும். அதேசமயம், தள்ளி வந்துட்டோமே என்று, தைரியமாக நின்று விடவும் கூடாது.
மோப்பம் பிடித்து வந்து துாக்கி அடிக்கும். அதனால், எந்தளவுக்கு முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் காட்டை விட்டு வெளியேறி விடுவது நல்லது.
காட்டில் யானைகள் நிம்மதியாக இல்லை எனில், நாம் நாட்டில் நிம்மதியாக வாழ முடியாது. இதை பொதுமக்கள் புரிந்து கொண்டால், மனிதனும், யானை களும் மோதிக்கிற பஞ்சாயத்து இருக்காது.