திருப்பூர்:அறுவடை திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாடும் போது, முதல் நாளில் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபடுகிறோம்.
விவசாய பணிகளுக்கும், பால் வளம் சிறக்கவும், உதவியாக இருக்கும் மாடுகளுக்கு, இரண்டாவது நாள் பொங்கல் வைக்கிறோம்.
இன்று, மாட்டுப்பொங்கல் கொண்டாட உள்ள நிலையில், மாடுகளை தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்தது.
மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டுதல், கயிறு மாற்றுதல், புதிய சலங்கை பொருத்திய கச்சை அணிவித்தல், அழகிய கொம்பு கயிறு கட்டுதல் போன்ற பணிகள் நேற்று நடந்தது. இன்று மீண்டும், குளிப்பாட்டி, மாடுகள் அலங்கரிக்கப்படும்.
மாடுகளின் கொம்பில், கரும்பு துண்டு, முறுக்கு ஆகியவை கட்டி விடப்படும். மாடுகளுக்கு மரியாதை செய்து, தீப, துாபம் செய்து வழிபட்டு, பொங்கல் வழங்கப்படும்.
பட்டி பொங்கல் வைக்கும் இடத்தில், சிறிய குளம் போல் உருவாக்கி, சுவாமி நட்டு வைத்து, வழிபாடு நடத்தப்படும்; பிறகு, மாடுகளை குளத்தை உடைத்து செல்லும் வகையில் விரட்டப்படும். மாடுகள் துள்ளிக்குதித்து, குளத்தை தாண்டி ஓடுவதால், பால்வளமும், விவசாய பணிகளும் சிறப்பாக அமையும் என்பது, விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது.