ஜனவரி 16, 1978 -
ஆந்திர மாநிலம், ராயலசெருவு கிராமத்தில், ராஜபுத் வம்சத்தைச் சேர்ந்த, அகர்சிங் - ஆதியம்மாள் தம்பதிக்கு மகனாக, 1924 அக்டோபர், 15ல் பிறந்தவர் பீம்சிங். இவர், தமிழ் திரையின் இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் - பஞ்சுவிடம் உதவி எடிட்டராக சேர்ந்து, சினிமா கற்றார். பராசக்தி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி, சிவாஜியின் நடிப்பை கண்டு வியந்தார்.
எஸ்.எஸ்.ஆர்., நடிப்பில், அம்மையப்பன் படத்தை இயக்கி இயக்குனரானார். தொடர்ந்து, ராஜாராணி திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற்றார். இதன்பின், குடும்ப கதைகளை தேர்வு செய்து, சிவாஜியை பல வேடங்களில் நடிக்க வைத்தார். துவக்கத்தில் கருணாநிதியின் வசனங்களை மெருகூட்டிய இவர், அடுத்து பாடல்களுக்கு, எம்.எஸ்.வி., - - கண்ணதாசன் கூட்டணியை தக்க வைத்துக் கொண்டார்.
இவர் இயக்கிய பாகப்பிரிவினை, பதிபக்தி, படிக்காத மேதை, களத்துார் கண்ணம்மா, பெற்ற மனம், பாசமலர், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து வெற்றியடைந்தன. மாற்று மொழி கதைகளை தமிழுக்கு ஏற்ப மெருகூட்டியும். 'பா' வரிசை படங்களை எடுத்தும் வெற்றி பெற்ற இவர், 1978ல் இதேநாளில், தன், 53வது வயதில் மறைந்தார்.
நாடகத்திலிருந்த சிவாஜியை, திரைக்கு ஏற்ப வார்த்து அழகு பார்த்த இயக்குனர் பீம்சிங் மறைந்த தினம் இன்று!