பல்லடம்:விதிமுறை மீறி வெடி வைத்ததாக எழுந்த புகார் குறித்து, பல்லடம் போலீசார் குவாரி உரிமையாளர் மற்றும் ஊழியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம் அடுத்த, கோடங்கிபாளையம் கிராமத்தில், கல்குவாரி ஒன்றில் வெடி வைக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக, நில அதிர்வு ஏற்பட்டு, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அச்சமடைந்ததாகவும், அப்பகுதி விவசாயிகள் சிலர் பல்லடம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.
''விதிமுறை மீறி செயல்பட்ட கல்குவாரி உரிமையாளர் மற்றும் வெடி வைத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, தாசில்தார் நந்தகோபால், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர், வெடி வைத்ததாக கூறப்பட்ட கல்குவாரியில் விசாரணை மேற்கொண்டனர். விவசாயிகள் அளித்த புகார் மற்றும் ஆய்வின் அடிப்படையில், கல்குவாரி உரிமையாளர் சண்முகம், வெடி வைத்த ஊழியர் சென்னப்பன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.