பல்லடம்:போலீசார், தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடிவ தில்லை. அதிலும், குறிப்பாக பண்டிகை உள்ளிட்ட நாட்களில், போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.
இதன் காரணமாக, போலீசார், பண்டிகை நாட்களையும் பணிகளுக்கு இடையே கழிக்கின்றனர். அவ்வாறு, பொங்கல் பண்டிகையையும், போலீசார், ஸ்டேஷன்களிலேயே கொண்டாடி மகிழ்ந்தனர்.
பல்லடம் உட்கோட்டத்தின் கீழ், பல்லடம், அவினாசிபாளையம், காமநாயக்கன்பாளையம், மங்கலம், மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்டவை உள்ளன. இவற்றில், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், மற்றும் காவலர்கள் என, 200க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர். நேற்று உட்கோட்டத்துக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் அனைத்திலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. போலீசார் பலர் வழக்கம்போல் சீருடையிலும், சிலர் பாரம்பரிய உடைகளிலும் பங்கேற்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
முன்னதாக, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீசார் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க, பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கல் பானை பொங்கியதும், பொங்கலோ பொங்கல் என அனைவரும் குலவை எழுப்பி, பொங்கலை வரவேற்று மகிழ்ந்தனர்.