கோவை:கோவையில் தை மாதம் முதல் நாளான நேற்று, தை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய, கலாசார நிகழ்வுகளும், விளையாட்டு போட்டிகளும் களைகட்டின.
அதிகாலை மக்கள் நீராடி, புத்தாடை அணிந்து வாசலில் வண்ணக்கோலமிட்டு, பொங்கல் பானைகளுக்கு மஞ்சள் திலகமிட்டு, குங்குமம் வைத்து, மஞ்சள் கொத்து கட்டி, அடுப்பு மூட்டி, புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.
பானைகளில் பொங்கல் நுரைத்து பொங்க, பொங்க, 'பொங்கலோ பொங்கல்' என்று உரக்கச்சொல்லி குலவையிட்டு மகிழ்ந்தனர்.
n உக்கடம் பெரியகுளக்கரையோரம் அமைந்துள்ள அம்மன் மற்றும் எல்லைக்கருப்பராயசுவாமி கோவிலில், பெண்கள் வரிசையாக அடுப்புமூட்டி பொங்கலிட்டனர். சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
n கோவை மாநகராட்சி மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், உக்கடம் பெரியகுளக்கரையில் தமிழர்களின் கிராமிய இசை வாத்தியங்கள் முழங்க, பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும், பழங்குடியினரின் பாரம்பரிய இசை இசைக்கப்பட்டது. நிமிர் கலைக்கூடம் வழங்கிய பறை இசை முழங்கியது. நாட்டுப்புற பாடல் மற்றும் நாட்டுப்புற நடனம், சிலம்பம், உறியடி நடந்தது.
n வைசியாள் வீதியை அடுத்து உள்ள, தர்மராஜா கோவில் திடலில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இணைந்து நடத்திய, பொங்கல் விழாவில் திரளான பெண்கள் அடுப்புமூட்டி பொங்கல் வைத்தனர். கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து, விளையாட்டுபோட்டிகள் நடைபெற்றன.
n சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் சார்பில், சரவணம்பட்டி கவுமார மடாலய பள்ளி மாணவர்களுக்கு, பொங்கல் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உதவி இருப்பிட மருத்துவ அலுவலர் மணிகண்டன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
n தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இளைஞர்களுக்கு கம்பு சுற்றுதல், கபடி, கைப்பந்து போட்டிகளும், பெண்களுக்கு வண்ணக்கோலமிடுதல், இசை இருக்கை, பாட்டு, நடனம், நாட்டிய போட்டிகள் நடைபெற்றன. திரளானோர் பங்கேற்றனர்.
n லைட்ஹவுஸ் வீதி திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜமாப்குழுவினரின் இசை இடம் பெற்றது. இளைஞர்களின் ஆட்டம், பாட்டம் அனைவரையும் கவர்ந்தது. திரளான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
n கோவையை அடுத்த சென்னனுாரில், விளைநிலங்களுக்கு நடுவே அமைந்துள்ள சித்தம்மாள் கோவிலில், திரண்ட பெண்கள் வரிசையாக அடுப்பு மூட்டி பொங்கலிட்டனர். சிறப்பு வழிபாடுகளுக்கு பின், குடும்பம் சகிதமாக அனைவரும் வாழ்த்துக்களை பரிமாறி உணவு அருந்தினர்.
n கோவைப்புதுார் 'ஆர்' பிளாக் பார்லிமென்ட் அசோசியேசன் சார்பில், கோவைப்புதுார் 'ஏ' கிரவுண்டில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு ஓட்டப்பந்தயம், பிஸ்கட் கடித்தல், தவளை ஓட்டம், சாக்கு ஓட்டம், நடைபயணப்போட்டி, இசை அமர்வு, சதுரங்கம், கோலப்போட்டி, பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இன்று ஆர் பிளாக் வளாகத்தில் இசை நாட்டியம், நடன மாறுவேடம், திருக்குறள் ஒப்புவித்தல், பலுான் உடைத்தல் போட்டிகள் நடக்கின்றன.
n கோவைப்புதுார் 'என்' பிளாக் வீட்டுவசதி வாரிய வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், காலை 7:00 மணிக்கு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விளையாட்டு போட்டிகள் நடந்தன.
n சுண்டக்காமுத்துார் சமீம் கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள், மகளிருக்கு கோலமிடும் போட்டிகள், குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றன.
n ரேஸ்கோர்ஸ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் அரசு ஊழியர்கள் நேற்று, பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். திரளானோர் பங்கேற்றனர். அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு, பல்வேறு போட்டிகள் நடத்தி மகிழ்ந்தனர்.
n டாக்டர் பாலசுந்தரம் சாலையிலுள்ள, போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், போலீசார் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் தமிழர் மரபுபடி பொங்கல் விழா கொண்டாடினர். மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பங்கேற்று மகிழ்ந்தார்.
n மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, இஸ்லாமியர்கள் சிலர் ஹிந்துக்களோடு இணைந்து, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார் கல்லுாரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றனர். உறியடி, கபடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளிலும் பங்கேற்றனர்.
n மலுமிச்சம்பட்டியிலுள்ள சி.எஸ்.ஐ.,கிறிஸ்து நாதர் ஆலயத்தில் பாரம்பரிய உடை அணிந்து, ஆலய வாசலில் சாணம் தெளித்து, கோலம் இட்டு, மாவிலை தோரணங்கள், மாட்டு வண்டி என , தமிழ்வழி பண்பாடு இசை கருவிகளுடன், கிறிஸ்தவ பாடல்களை பாடி, திருச்சபை மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
n செட்டிபாளையம் பேரூராட்சியில், சலங்கைமாடு என்ற பாரம்பரிய நிகழ்ச்சி நடந்தது. இதில் ஐந்து வயது குழந்தை முதல் என்பது வயது பெரியவர்கள் வரை, மெய்சிலிர்க்கும் கும்மி விளையாட்டுகள் நடைபெற்றன.
n தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் சார்பில், பொங்கல் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, சாய்பாபாகாலனி அண்ணா தினசரி மார்க்கெட் வளாகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் இருதயராஜா தலைமை வகித்தார். மார்க்கெட் கூலி தொழிலாளர்களுக்கு பச்சரிசி, வெல்லம், திராட்சை ஏலம், கரும்பு,வேட்டி, சேலை வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
n காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையிலுள்ள, பா.ஜ.,அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமை வகித்தார், மகளிர் அணி மாவட்ட தலைவர் ஜெயஸ்ரீ , மாவட்ட பொது செயலாளர் பிரீத்திலட்சுமி, துணை தலைவர் ஜெயதிலகா உள்ளிட்ட பலர் பொங்கல் வைத்து, சிறப்பு வழிபாடு செய்தனர்.
n உக்கடம் பா.ஜ.,மண்டல் சார்பில், கெம்பட்டிகாலனியில் பொங்கல் விழா நடந்தது. சிலம்பம் விளையாட்டு, வாள்வீச்சு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. உக்கடம் மண்டல் தலைவர் சேகர், மாநில ஊடக பிரிவு துணை தலைவர் சபரிகிரீஷ் பங்கேற்றனர்.
n மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் தேவாலயத்தில், பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
காலை, 8:15 மணிக்கு பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் தலைமையில், பாதிரியார் ஜோ டேனியல், பாடல் திருப்பலியை நிறைவேற்றினார். அன்பியங்கள் சார்பில், வீடுகளில் செய்து கொண்டு வந்த பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதன் பிறகு லக்கி கார்னர், உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.