கோவை:பொங்கல் விழாவையொட்டி, கோவை பூமார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 4,000 ரூபாய்க்கு விற்பனையானது.
கோவை பூ மார்க்கெட்டிற்கு சத்தியமங்கலம், பண்ணாரி, பெ.நா.பாளையம், துடியலுார் பகுதிகளிலிருந்தும், மேட்டுப்பாளையத்தின் ஒரு சில பகுதிகளிலிருந்தும் மல்லிகை, முல்லை, ஜாதி, செவ்வந்திப்பூக்கள் விற்பனைக்கு வரும்.
பனிப்பொழிவு அதிகரித்ததால் மல்லிகை, முல்லை, ஜாதி உள்ளிட்ட பூ ரகங்கள் பறிப்பதில் தொய்வு ஏற்பட்டது. பூக்கள் மொட்டுக்களாக கருகிவிட்டன. இதன் காரணமாக, மற்ற பூக்களை விட மல்லிகைக்கு மவுசு அதிகரித்தது. போதுமான அளவு மார்க்கெட்டிற்கு மல்லிகை பூக்கள் விற்பனைக்கு வரவில்லை. இதனால், ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனையானது.
முல்லை, ஜாதிப்பூக்கள் கிலோ 3,000 ரூபாய்க்கு விற்றது. செவ்வந்தி கிலோ ரூ.700க்கு விற்றது. மற்ற பூக்களின் விலையும் உயர்ந்தே இருந்தது. தாமரை மலர் ஒன்று 100 ரூபாய்க்கு விற்றது. பத்து எண்ணிக்கை கொண்ட ரோஜா கட்டு, 500 ரூபாய்க்கு விற்றது.
இப்படி பூமார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்தே இருந்தது. பொங்கல் விழா கொண்டாட்டங்கள் களைகட்டி இருந்ததால், ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக விலை உயர்ந்ததாக வியாபாரிகள் கூறினர்.