திருப்பூர்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளியூர் செல்வோர் வசதிக்காக, கடந்த 12ம் தேதி இரவு பஸ் இயக்கம் துவங்கப்பட்டது. மறுநாள், 13ம் தேதி வரை பள்ளி, கல்லுாரிகளும், நேற்று முன்தினம் (14ம் தேதி) வரை பனியன் நிறுவனங்கள் இயக்கமும் இருந்ததால், சிறப்பு பஸ்களில் கூட்டம் இல்லை.
ஆனால், நேற்று காலை முதல் மாலை வரை கோவில்வழியில் இருந்து மதுரை, தேனி, நாகர்கோவில், திருநெல்வேலி செல்லும் பஸ்களில் ஓரளவு கூட்டம் அதிகரித்திருந்தது. திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் செல்லும் பஸ்களில் இருக்கை நிரம்பியிருந்தது. பஸ் ஸ்டாண்டில் காத்திருப்போர் யாருமில்லை. வருபவர் அப்படியே பஸ் ஏறி புறப்பட்டுச் சென்றனர். மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம் சென்ற பஸ்களில் பயணிக்க பயணிகள் முண்டியடித்தனர். மதியத்துக்கு பின் கூடுதல் பஸ் சேலத்துக்கு இயக்கப்பட்டு, நிலை சமாளிக்கப்பட்டது.
போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''தீபாவளி ஒரு நாள் பண்டிகை. அதனால், ஒரே நாளில் அனைவரும் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர். ஆனால், பொங்கல் அப்படியில்லை. நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், பலர் இன்று (நேற்று) தான் பயணிக்கின்றனர். வீட்டில் பொங்கல் வைத்து விட்டு ஊருக்கு குடும்பத்துடன் பஸ் ஏறுபவர்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு கூட்டம் சற்று குறைவாக இருந்தது. நேற்று காலை அதிகரித்தது. மதியம் குறைந்தது. இன்று மதியம் வரை இதே நிலை இருக்கும். சொந்த ஊர் சென்றவர் உடனே திரும்ப மாட்டார்கள். வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு நான்கு நாட்களும் வந்து கொண்டே இருப்பர்'' என்றனர்.