கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் இந்த ஆண்டில் நடக்கவுள்ளதை அடுத்து, தேர்தலுக்கு தயாராகும் பணியை பா.ஜ., இப்போதே துவங்கிவிட்டது. ஏற்கனவே ஆட்சியில் உள்ள மாநிலங்களில் அதிகாரத்தை தக்க வைக்கவும், எதிர்கட்சிகள் வசம் உள்ள மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றவும் வியூகம் வகுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பா.ஜ., செயற்குழு கூட்டம், இன்றும், நாளையும் புதுடில்லியில் நடக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம், தென் மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களான மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய ஒன்பது மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கின்றன.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த ஒன்பது மாநில சட்டசபை தேர்தல் பா.ஜ.,வுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இங்கு பெறப்போகும் வெற்றி, 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பதே அனைத்துக் கட்சிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த ஒன்பது மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 116 லோக்சபா தொகுதிகள் உள்ளன. பார்லி.,யின் மொத்த பலத்தில் இது 21 சதவீதமாக உள்ளது. எனவே, வெற்றியை வசமாக்க அனைத்துக் கட்சிகளும் வியூகம் வகுக்க துவங்கி உள்ளன.
இதில் வழக்கம் போல பா.ஜ., முந்திக்கொண்டுள்ளது. இந்த ஆண்டு முழுதும், 'ஜி - 20' அமைப்பு கூட்டங்களில் பிரதமர் மோடி, 'பிஸி'யாக உள்ளார். பல்வேறு மாநிலங்களில் நடக்கும் கூட்டங்களிலும் அவர் பங்கேற்க உள்ளதால், தேர்தல் பிரசாரத்தில் அவர் எந்த அளவு கவனம் செலுத்த முடியும் என்பது கேள்விக் குறியாகி உள்ளது.
எனவே, கட்சியினருக்கான தேர்தல் பணி மற்றும் வியூகங்களை வகுக்க இப்போதே பா.ஜ., தயாராகிவிட்டது. இது தொடர்பாக விவாதிக்க பா.ஜ., செயற்குழு கூட்டம், இன்றும், நாளையும் புதுடில்லியில் நடக்கிறது. பா.ஜ., தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இந்த கூட்டத்துக்கு தலைமை வகிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இந்த ஒன்பது மாநில சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பான முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், பா.ஜ., ஆளுங்கட்சியாக உள்ள மாநிலங்களில் உள்ள அதிருப்தி அலைகளை சரி செய்யவும், எதிர்கட்சிகள் வசம் உள்ள மாநிலங்களை கைப்பற்றுவது குறித்தும், இந்த கூட்டத்தில் வியூகம் வகுக்கப்பட உள்ளதாக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., 'ஹாட்ரிக்' அடிக்குமா அல்லது காங்., மீண்டும் ஆட்சியை பிடிக்குமா என்ற கேள்விக்கு, இந்த ஒன்பது மாநில சட்டசபை தேர்தலில் விடை கிடைக்க வாய்ப்புள்ளதால், இதில் தனி கவனம் செலுத்த பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-