அவனியாபுரம்:பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான உலகப் புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று, வெகு விமரிசையாக நடந்தது. களத்தில் பாய்ந்து மிரட்டிய முரட்டுக் காளைகளை, திமிருடன் காளையர்கள் நேருக்கு நேர் சந்தித்து அடக்கினர். போட்டியில், 28 காளைகளை அடக்கி, முதலிடம் பிடித்த வீரர் விஜய்க்கு கார் பரிசு வழங்கப்பட்டது.

இங்கு ஜல்லிக்கட்டு களத்தில் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், சு.வெங்கடேசன் எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் ராஜன்செல்லப்பா, பூமிநாதன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர், விலங்குகள் நலவாரிய அதிகாரி மிட்டல் முன்னிலையில் காலை 8:00 மணிக்கு போட்டி துவங்கியது.

உறுதி மொழியுடன் துவக்கம்
போட்டிக்கு 300 வீரர்கள் காத்திருக்க 800 காளைகள் வரிசைகட்டி நின்றன. முதல் சுற்றில் மஞ்சள் நிற 'டி ஷர்ட்' அணிந்த 25 வீரர்கள் களமிறங்கினர். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த முதல் காளை 'விக்ரம்' பிடிபட்டது. இம்முறை களத்தின் இருபுறமும் பாதுகாப்புக்காக 2 அடுக்கு தடுப்புகள் அமைத்து காயம் ஏற்படாமல் இருக்க தேங்காய் நார் பரப்பி இருந்தனர்.
சுற்றுக்கு 25 வீரர்கள்
ஒவ்வொரு சுற்றிலும் 25 வீரர்கள், 25 காளைகள் களமிறங்கின. அதிக காளை பிடித்த வீரர்களை அடுத்த சுற்றுக்கு அனுமதித்தனர். காயமடைந்தோருக்கு அரசு, மாநகராட்சி மருத்துவ
மனைகள் சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காளைகளை பரிசோதிக்க மண்டல கால்நடை துறை இணை இயக்குனர் நடராஜகுமார் தலைமையில் 6 குழுவினர், கால்நடை ஆம்புலன்ஸ்கள் தயாராக இருந்தன.அவனியாபுரம் சக்தி விநாயகர் கோயில் சார்பில் தொடர் அன்னதானம் வழங்கினர். 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுட்டனர்.
வியந்து ரசித்த இஸ்ரேலியர்
ஜல்லிக்கட்டை ரசித்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெத்ரா, ஜேவா கூறியதாவது: ஜல்லிக்கட்டை காண்பதற்காகவே மதுரைக்கு வந்துள்ளோம். இது போன்ற ஒரு வீர விளையாட்டு எங்கள் நாட்டில் இல்லை. அதனால் இதை பார்க்க வியப்பாக தான் இருக்கிறது. தமிழக பண்பாடும், கலாசாரமும் எங்களுக்கு பிடித்திருக்கிறது. காளைகளை அடக்கும் ஆண்கள் தான் திருமணம் செய்ய முடியும் என்ற வழக்கம் முன்பு இருந்ததாக சிலர் கூறினர். இன்றும் அந்நிலை இருந்தால் ஆண்களின் நிலைமை பாவம்தான்...' என சிரித்துக் கிளம்பினர்.
கெத்துதான் எங்கள் சொத்து
அழகுபேச்சி, அவனியாபுரம்: நான் 7ம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு சின்ன வயதில் இருந்தே காளைகள் மேல் ஆர்வம் அதிகம். அதனால் ஒரு காளை வாங்கி 'ஸ்டைல்' என பெயரிட்டு
குழந்தையை போல் வளர்க்கிறேன். என்னைப் போலவே ஸ்மார்ட்டான என் காளையும்
ஜல்லிக்கட்டில் களமிறங்க ஆர்வமாக இருந்தது. பிற காளைகளை பார்த்து, லேசா சீறியதே தவிர, என் சொல்லுக்கு கட்டுப்பட்டு சேட்டை பண்ணாமல் வந்தது. இந்த காளைக்கு இது தான் முதல் வாடி. அடுத்த போட்டிகளுக்கும் வாடிகளுக்கு நானே அழைத்துச் செல்வேன். காளை வளர்ப்பதே கெத்து. அதுவே எங்களுக்கு சொத்து, என்றார்.
* 45 பேருக்கு காயம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 45 பேர் காயமடைந்தனர். இதில் 16 வயது சிறுவன் உட்பட 14 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். போலி முகவரி, ஆள்மாறாட்டம் செய்தோர் வெளியேற்றப்பட்டனர். தகுதியில்லா காளைகள் திருப்பி அனுப்பப்பட்டன.
சேர் முதல் கார் வரை பரிசு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 11 சுற்றுக்களின் முடிவில் 737 காளைகள் களமிறங்க, 280 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் 28 காளைகளை அடக்கி முலிடம் பிடித்த சோலையழகுபுரம் விஜய்க்கு, முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்திக், 13 காளைகளை அடக்கிய விளாங்குடி பாலாஜி ஆகியோருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் டூவீலர்கள் பரிசு வழங்கப்பட்டது.
சிறந்த வீரர்களுக்கு சிங்கப்பூர் விமான டிக்கெட் வழங்கப்பட்டது. அதுபோல பிடிபடாத காளைகளின் உரிமையாளர்கள் காமேஷ், கார்த்திக், முருகன் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அனைத்து காளைகளுக்கும் அமைச்சர் மூர்த்தி தங்ககாசு வழங்கினார். பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ.,க்கள் ராஜன் செல்லப்பா, பூமிநாதன்,மேயர் இந்திராணி, மண்டல தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, முகேஷ்சர்மா, சுவிதா சார்பில் வீரர்களுக்கு
வெள்ளிக்காசுகள், சேர், பாத்திரங்கள் என பரிசு மழை பொழிந்தது.