வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தேர்தல் நேரத்தில் தமிழக மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களை ஏமாற்றி, கூட்டணி கட்சிகளின் தயவால் திமுக ஆட்சிக்கு வந்ததாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அ.தி.மு.க என்ற மாபெரும் பேரியியக்கத்தை எம்ஜிஆர் துவங்கி, அதன் தலைவராக மக்களின் பேராதரவை பெற்று 3 முறை தமிழகத்தின் முதல்வராக நல்லாட்சியை வழங்கினார். சங்க இலக்கிய காலத்தில் இருந்த கடையேழு வள்ளல்களைத் தொடர்ந்து, வாரி வாரி வழங்கி எட்டாவது வள்ளலாகத் திகழ்ந்தவர் எம்ஜிஆர்.
1972ம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசிக்கு ஏற்றவாறு பஞ்சப்படி கொடுக்கப்படும் என்று அறிவித்து அரசாணையை வெளியிட்டது. அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி இதை மாநில அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த மறுத்தார். பிறகு ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் மாநில அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான பஞ்சப்படி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கொடுக்கும் பொருட்டு, ஊதியக் குழு ஒன்றினை அமைத்து, அதை அமல்படுத்திக் காட்டி, அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.
இன்றைய திமுக அரசு தேர்தல் நேரத்தில் தமிழக மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி, கூட்டணிக் கட்சிகளின் தயவால் ஆட்சிக்கு வந்தது. இந்த மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப எம்ஜிஆர் பிறந்தநாளில் வீரசபதம் ஏற்போம். கந்துஞ்சாது களப்பணி ஆற்றி மீண்டும் அதிமுக.,வின் நல்லாட்சியை மக்களுக்கு வழங்குவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.