'எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்ற வித்தையை, நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்; அதனால் தான், கட்சிக்கு தேசிய தலைவராக உள்ளார்...' என, பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா பற்றி பெருமையுடன் பேசுகின்றனர், அந்த கட்சியை சேர்ந்த, கர்நாடகா மாநில தொண்டர்கள்.
இங்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்த சில மாதங்களில், இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆட்சியை தக்க வைப்பதற்காக, பா.ஜ., தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.
சமீபத்தில், கர்நாடகாவுக்கு வந்த நட்டா, இங்கு அதிக அளவில் வசிக்கும் லிங்காயத், குருபா, வால்மிகி உள்ளிட்ட சமுதாயங்களின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து, நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
இடஒதுக்கீடு விவகாரத்தில், இந்த சமூகத்தினர்ஆளுங்கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாக, கர்நாடகாவில் பரவலாக பேச்சு உள்ளது. இந்த அதிருப்தி, சட்டசபை தேர்தலில் கட்சிக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தி விடுமோ என்ற பயம், பா.ஜ., மேலிடத்திற்கு வந்து விட்டது. இதன் காரணமாகவே, அந்த சமூகத்தினரை சமாதானப்படுத்துவதற்காக, அவர்களின் தலைவர்களை நட்டா சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோரை, நட்டா உடன் அழைத்துச் செல்லவில்லை. இவர்கள் மீது, குறிப்பிட்ட சமூகத்தினர் அதிருப்தியில் உள்ளதே இதற்கு காரணம்.
நட்டாவின் இந்த சாமர்த்தியமான நடவடிக்கைகளை தான், பா.ஜ.,வினர் பாராட்டுகின்றனர். 'அரசியல் ராஜதந்திரத்துக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக நட்டா திகழ்கிறார்...' என்கின்றனர், கர்நாடகா பா.ஜ., தொண்டர்கள்.
Advertisement