வி.சி., கட்சி எம்.பி., ரவிகுமார் அறிக்கை:தை மாதத்தின் முதல்
நாளை, தமிழ் புத்தாண்டாக அறிவித்து, 2008-ல் தி.மு.க., அரசு இயற்றிய
சட்டத்தை, 2011-ல், அ.தி.மு.க., அரசு ரத்து செய்தது. ஜாதி கடந்த,
மதச்சார்பற்ற தமிழ் அடையாளத்தை கட்டியமைக்க, கருணாநிதி வழியில், தை முதல்
நாளை புத்தாண்டாக அறிவிக்க, தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
தி.மு.க., சும்மா இருந்தாலும், 'சொறிஞ்சு விட' உங்களை மாதிரி ஆட்கள் இருப்பது தான் பாதி பிரச்னைக்கு காரணம்!
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேச்சு: தி.மு.க., ஆட்சியின் தோல்விகளை மறைக்க, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அரசு, பல்வேறு பிரச்னைகளை எழுப்பி வருகிறது. அதன் பல வெளிப்பாடுகளில் ஒன்று தான், சேது சமுத்திர திட்டம். இது, எந்த காலத்திலும் நடைபெறாது என்பது அவர்களுக்கும் நன்றாக தெரியும்.
மத்திய அரசின் பெயரை, எந்தெந்த வகையில் தமிழகத்தில் கெடுக்க முடியும் என்பதற்கு, சேது சமுத்திர திட்டம் தொடர்பான தீர்மானம் ஒரு உதாரணம்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'நீட்' தேர்வுக்கு கால அவகாசம் இல்லாததால், நீதிமன்ற உத்தரவுப்படி ஓராண்டும், அடுத்து ஜெயலலிதா, பள்ளி பாடத் திட்டத்தை தரம் உயர்த்த, ஐந்து ஆண்டு அவகாசமும் கேட்ட காரணத்தால், பிரதமர் மோடியால் மீண்டும் ஓராண்டு, 'நீட்'டுக்கு விலக்கு அளிக்கப்பட்டது; இது தான் உண்மை. 'நீட்' தேர்வுக்கான அறிவிக்கைக்கு துணை போன, தி.மு.க.,வின் பங்கு இதில் எதுவும் இல்லை.
இயற்கையாக பெய்யும் பருவமழைக்கே, 'தளபதி ஆட்சியில் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது' என, தற்பெருமை அடிப்பவர்கள் தானே தி.மு.க.,வினர்!
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: 'தமிழகத்தை தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்று ஒருத்தன் சொல்றான்' என, முதல்வர் ஸ்டாலின் கண்ணியமற்ற முறையில், கவர்னரை மனதில் வைத்து பேசி இருக்கிறார்; இதை வன்மையாக கண்டிக்கிறேன். இதே ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது, கொடைக்கானல் நகராட்சி பஸ் நிலையம் கட்டடத்தில் இருக்கும் கல்வெட்டில், 'தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்' என்று தான் உள்ளது. அரசின் தோல்வியை மறைக்க, தமிழ்நாடா, தமிழகமா என்று, நாடகம் நடத்துவதை முதல்வர் நிறுத்த வேண்டும்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என, முழங்கினார் அண்ணாதுரை... ஆனால், தி.மு.க.,வில் பேச்சளவுக்கு தான் இது இருக்கிறது!
ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் துரை பேட்டி: சேது சமுத்திர திட்டம், ஆங்கிலேயர் காலத்திலும், நேரு காலத்திலும் கொண்டு வர நினைக்கப்பட்டது. இத்திட்டம் நிறைவேறினால், தென்மாவட்ட தொழில்கள் மேலோங்கும். அரசியல் காரணங்களால் நிறைவேற்றாமல், பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு, ம.தி.மு.க.,சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.
'நாங்களும் அரசியல்ல தான் இருக்கோம்' என்பதை, அப்பப்ப இந்த மாதிரி அறிக்கை வாயிலாக தெரிவிக்கிறாரு!