''எம்.எல்.ஏ., நன்னா விபரமா தான் இருக்கார் ஓய்...'' என்றபடியே, காபியை குடித்தார், குப்பண்ணா.
''விஷயம் என்னன்னு சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''அ.தி.மு.க.,வின் அசைக்க முடியாத கோட்டையா, கொங்கு மண்டலம் இருக்கோல்லியோ... அங்க இருக்கற, அவிநாசி தனித் தொகுதியில, முன்னாள் சபாநாயகர் தனபால் தான் இப்ப எம்.எல்.ஏ.,வா இருக்கார் ஓய்...
''தேர்தல்ல ஜெயிச்சதுக்கு அப்பறமா, ஒன்றிரண்டு முறை தான் மனுஷன் தொகுதி பக்கமே தலையை காட்டினார்... இதனால, சொந்தக் கட்சிக்காராளே எரிச்சல்ல இருக்கா ஓய்...
''மின் கட்டண உயர்வை கண்டிச்சு, அ.தி.மு.க., சார்புல சமீபத்துல ஆர்ப்பாட்டம் நடத்தினாளோல்லியோ... அதுக்கு மட்டும், 'டாண்'னு தனபால்ஆஜராகிட்டார் ஓய்...
''கட்சிக்காராகிட்ட கேட்டா, 'உடம்பு சரி இல்லாததால தான், தொகுதி பக்கம் அடிக்கடி வர முடியறதில்லைன்னு, எம்.எல்.ஏ., சொல்றார்... ஆனா, ஆர்ப்பாட்டத்துல கலந்துண்டு, கட்சி தலைமையிடம் மட்டும்நல்ல பேர் வாங்க பார்க்கறார்'னு சொல்றா...
''அப்பப்ப, தொகுதி பக்கம் வந்துட்டு போனா தானே ஓய், அடுத்த தேர்தல்ல ஜனங்க முகத்தை பார்த்து ஓட்டு கேட்க முடியும்...'' என்றார், குப்பண்ணா.
''கொடைக்கானல் பேரை சொன்னாலே, சினிமாக்காரங்கஅலறுதாவ வே...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் அண்ணாச்சி.
''ஏன், என்னங்க ஆச்சு...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில, நிறைய சினிமா, 'ஷூட்டிங்' நடக்கும்லா... இப்ப குறைஞ்சிட்டே வருது வே...
''விசாரிச்சதுல, அரசு அனுமதி வாங்கிட்டு முறையா ஷூட்டிங் நடத்த வர்றவங்களிடம், வனத்துறை, நகராட்சி அதிகாரிகள் எப்படியாவது, 'மீட்டர்' போட்டு, துட்டு தேத்த பார்க்காவ... குடுக்க மறுத்தா, ஏதாவது காரணத்தை சொல்லி, ஷூட்டிங் நடத்த விடாம, 'கட்டை' போடுதாவ வே...
''இதனால, 'வம்பே வேண்டாம்'னு, தயாரிப்பு நிறுவனங்கள், கேரள மலைப் பகுதிகள் பக்கம் வண்டிய திருப்பிட்டாவ... அதிகாரிகளோட பேராசையால, பாவம், சிறு வியாபாரிகள் பொழப்புல தான் மண்ணு விழுது வே...'' என்றார், அண்ணாச்சி.
''எதுல தான் கோஷ்டி சண்டை போடுறதுன்னு விவஸ்தை வேண்டா மாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்., -எம்.எல்.ஏ.,வுமான திருமகன், சமீபத்துல இறந்து போயிட்டாரே... அவரது படத்திறப்பு விழாவை, சென்னை சத்தியமூர்த்தி பவன்ல நடத்த, மீனவர் அணி சார்பா ஏற்பாடு நடந்துச்சுங்க...
''மாநில தலைவர் அழகிரியும் அனுமதி வழங்கிட்டாரு... இந்த நேரத்துல, 'காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சார்பா சத்தியமூர்த்தி பவன்ல படத்திறப்பும், நினைவேந்தல் கூட்டமும் நடத்தணும்'னு துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி சொன்னாருங்க...
''இதனால, மீனவர் அணியின் படத்திறப்பு நிகழ்ச்சியை நிறுத்திட்டாங்க... இது சம்பந்தமா இருதரப்புக்கும் வாக்குவாதம் முத்திடுச்சுங்க... கடைசியில, மீனவர் அணியின் படத்திறப்பு நிகழ்வு, திருவல்லிக்கேணியில நடந்துச்சுங்க...
''இந்த கூத்துக்கு மத்தியில, சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஏற்பாட்டுல, சட்டசபை வளாகத்துல திருமகன் படத்திறப்பு நடந்துச்சுங்க... இதனால, சத்தியமூர்த்தி பவன்ல நடக்க இருந்த படத்திறப்பை ரத்துசெஞ்சிட்டாங்க...
''குறைஞ்ச வயதுல இறந்து போனவர் பட திறப்புலயும் இப்படி கோஷ்டி அரசியல் பண்ணியது, இளங்கோவன் ஆதரவாளர்களை வேதனையில தள்ளிடுச்சுங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
பேச்சு முடிய பெஞ்ச் கலைந்தது.