பறவைகளை படம் எடுப்பது சவாலானது. மிகவும் பொறுமை காக்க வேண்டும். அப்படி காத்திருந்து படமெடுப்பதில் வல்லவராக இருக்கிறார், வேலுாரைச் சேர்ந்த சுந்தர்ராஜன். தொழிலதிபரான இவர், மன மகிழ்ச்சிக்காக, நீண்ட காலமாக புகைப்படம் எடுத்து வருகிறார்.
'ஆக்பா கிளிக்' என்ற அடிப்படை கேமரா காலத்தில் இருந்து படமெடுத்துவரும் இவர், பறவைகளைப் பற்றி, அருள் என்பவர் மூலம் புரிந்துகொள்ள ஆரம்பித்ததும், அதிலே தனி கவனம் கொண்டுள்ளார்.
இவர் எடுத்த பறவைகளைப் பற்றிய குறிப்புகளை, ஆங்கிலத்தில் மட்டுமின்றி அந்த பறவையின் சரியான தமிழ்ப் பெயரையும் - உதாரணத்திற்கு பனங்காடை, பூங்குயில், மரகதப்புறா - அது பற்றிய குறிப்புகளையும் தமிழிலேயே வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.
இயற்கை, பறவை குறித்து எளிய மாணவர்களும் தமிழில் அறிய இவ்வாறு ஈடுபட்டுள்ளார். குறிப்பாக இவர், ஆந்தைகளின் பல இனங்களை, பலவிதமாக படம் எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர், ''பறவைகளைப் பற்றி படிப்பதும், தெரிந்துகொள்வதும் மிக சுவாரசியமான விஷயம். காத்திருந்தால் மட்டுமே பறவைகளை படமெடுக்க முடியும்,'' என்றார்.
'பறவைகளை படம் எடுப்போர் யாராக இருந்தாலும், அதன் இயல்பான சூழலில் தொந்தரவு செய்யாமல் எடுக்க வேண்டும்' என, வளரும் புகைப்பட கலைஞர்களுக்கு எடுத்துரைக்கும் இவர், மேலும் இவ்வாறு கூறினார்.
''பறவைகளை பார்க்கப் பார்க்க, அவற்றுடன் பழகப்பழக, அவற்றின் வாழ்வியலில் உள்ள பல ஆச்சரியங்கள், நம்மை அதிசயப்படவைக்கும். அந்த பாக்கியம் எனக்கு கிடைத்து வருகிறது. அவற்றை படமாக எடுக்கும்போது, மனம் பரவசப்படுகிறது; அளவில்லாத ஆனந்தமும் ஏற்படுகிறது,'' என்றார்.
பறவைகள் எழுப்பும் பல்வேறு ஒலிகள் குறித்து ஆச்சரியம் அடையும் அவர், இரட்டை வால் குருவி, மற்ற சில பறவைகளைப் போல குரலை மாற்றி சப்தமிடும் ஆற்றலும் கொண்டது எனக்கூறி வியப்படைகிறார்.
இவரை mail@sundar.co என்ற இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம். - நமது நிருபர் -