சென்னை :பெங்களூரில் நடந்த தேசிய பால் பாட்மின்டன் போட்டி ஆடவர் பிரிவில், சென்னை எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி., பல்கலை, தங்கம் வென்று அசத்தியது.
பெங்களூரு, காமதேனு இளைஞர் சங்கம் சார்பில், தேசிய அளவிலான பால் பாட்மின்டன் போட்டி, அங்குள்ள உதயபானு மைதானத்தில் நடந்தது. 'லீக், நாக் அவுட்' மற்றும் 'சூப்பர் லீக்' முறையில் நடந்த இப்போட்டிகளில், இந்தியா முழுதும் 20 அணிகள் பங்கேற்றன.
காலிறுதிக்கு முந்தைய நான்கு 'லீக்' ஆட்டங்களில், முறையே பெங்களூரின் ராஜேஸ்வரி யூத் கிளப் மைசூரின் பி.பி.சி., - கர்ணுல் சாம் பைவ்ஸ், சென்னை ஏ.எம். இண்டஸ்ட்ரீ ஆகிய அணிகளை எஸ்.ஆர்.எம்., அணி தோற்கடித்தது. 'நாக் அவுட்' முறையில் நடந்த காலிறுதி போட்டியில், சென்னை கிரசன்ட் தொழில்நுட்ப கல்லூரி அணியை வீழ்த்தி, 'சூப்பர் லீக்' சுற்றுக்கு முன்னேறியது.
வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் 'சூப்பர் லீக்' ஆட்டத்தின் முதல் போட்டியில், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆடிய பெங்களூரு காமதேனு இளைஞர் சங்கம் அணியை 35:21, 35:24 என வீழ்த்திய எஸ்.ஆர்.எம்., அணி, தன் அடுத்த போட்டியில் சென்னை ஜே.ஜே.பாய்ஸ் அணியை 35:26, 35:24 என்ற புள்ளி கணக்கில் வென்றது.
மூன்றாவது 'சூப்பர் லீக்' ஆட்டத்தில் தமிழக அஞ்சல் துறை அணியை 35:28, 35:31 கணக்கில் வீழ்த்திய எஸ்.ஆர்.எம்., அணி, நான்காவது 'சூப்பர் லீக' ஆட்டத்தில், வலுமிக்க மங்களூரு ஆல்வாஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் வென்றால் தங்கம் உறுதி என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கின.
அனல் பறந்த நான்காவது 'சூப்பர் லீக்' ஆட்டத்தின் முதல் செட்டை 25:35 என ஆல்வாஸ் அணி கைப்பற்ற, சுதாரித்த எஸ்.ஆர்.எம்., அணியினர் அடுத்த இரு செட்டுகளையும் 35:29, 35:23 என்ற புள்ளி கணக்கில் வென்று, தங்கம் வென்று அசத்தியது.
வெள்ளி, வெண்கல பதக்கங்களை மங்களூரு ஆல்வாஸ், தமிழக அஞ்சல் துறை ஆகிய அணிகள் பெற்றன.