சென்னை, காணும் பொங்கலையொட்டி மெரினா, எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில், ஆயிரம் ஊர்காவல் படையினர் மற்றும் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மெரினா கடற்கரையில், இரண்டு தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். 15 இடங்களில், தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 11 காவல் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 'ட்ரோன்' கேமரா வாயிலாகவும் கண்காணிப்பு பணி நடக்கிறது. காணாமல் போனவர்கள் மீட்பு பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருட்டுகளை தடுக்க சாதாரண உடைகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவர்.
கடல் அலைகளை ஒட்டி, 16 குதிரைப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். நீச்சல் பயிற்சி பெற்ற உயிர் காக்கும் பிரிவினர் தயார் நிலையில் உள்ளனர். பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை,தீவுத்திடலில் பொருட்காட்சியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.